சென்னை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் நீரிழிவு துறை மற்றும் உணவுத்துறை சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பேரணி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தலைமையில் நடந்தது. பொது மக்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த மக்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணம் முறையற்ற உணவு பழக்கம் என உணவியல் நிபுணர் காலாராணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்த ஆண்டு அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவு என்ற கருத்தை முன்னிறுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தொற்றா நோய் தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ளாததால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து உடலில் சென்று சேர்வதில்லை இதனால் நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் துரித உணவு அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர். துரித உணவும் நேரத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் முறையற்ற முறையில் உணவை எடுத்து கொள்வதால் சிறுவயதிலே பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. மேலும் அவர்கள் ஓடி விளையாடாமல் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பது உடல் பருமன் அதிகரிக்கிறது. அதனால் நீரிழிவு நோய் சிறுநீரக பிரச்சனை உள்ளிட்டவை ஏற்படுகிறது. எனவே மக்கள் மற்றும் குழந்தைகள் முறையாக நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.