Friday, April 12, 2024
Home » இலைக்கட்சியின் பாரம்பரிய தொகுதியை கேட்டு மல்லுக்கட்டும் முரசு கட்சியால ஏற்பட்டுள்ள முட்டல் மோதல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இலைக்கட்சியின் பாரம்பரிய தொகுதியை கேட்டு மல்லுக்கட்டும் முரசு கட்சியால ஏற்பட்டுள்ள முட்டல் மோதல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘தாமரை கட்சி நிர்வாகிங்க கூட்டத்தில விரக்தியின் விளிம்பிற்கே மாநில தேர்தல் பொறுப்பாளர் சென்றுவிட்டாராமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியத்தில் தாமரை கட்சி நிர்வாகிங்க ஆலோசனை கூட்டம் நடந்திருக்கு.. இதுல தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அணி மற்றும் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துகிட்டாங்களாம்.. தேர்தலை மையமாக வைத்து நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில தேர்தல் பொறுப்பாளரோ விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டாராம்… இதற்கான காரணம், ஒரு வாக்குச்சாவடிக்கு 13 பொறுப்பாளர்கள் நியமிக்கணுமாம்..

ஒவ்வொரு பொறுப்பாளரும் 50 குடும்பங்களில் உள்ள வாக்குகளை சேகரித்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஏற்கனவே தலைமை அறிவித்த எந்த பணிகளும் இதுவரை சரியாக நடக்கவில்லையாம்… இதுகுறித்து கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, பதில் கூற சம்பந்தப்பட்ட அணி நிர்வாகிகள் யாரும் ஆலோசனை கூட்டத்தில் இல்லை. அங்கு இருந்த சில நிர்வாகிகளும், மாநில பொறுப்பாளரின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்லவில்லையாம்..

இதனால் நிர்வாகிகள் மீது உச்சக்கட்ட டென்சனுக்கு சென்ற மாநில தேர்தல் பொறுப்பாளர், கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டதோடு யாரிடமும் சொல்லாமல் கடும் கோபத்தில் காரில் ஏறி பறந்து விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பார்டர் லிமிட்ல களவு போற கால்நடைகள் சந்தையில மீண்டும் விற்பனைக்கு வர்றதா விவசாயிங்க குமுறுகிறாங்களாமே எங்கவாம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வாணி பாடிய ஊர் இருக்குது… இங்க இருந்து ஆந்திரா பார்டரை ஒட்டியிருக்குற ஊரான, தி என்று தொடங்கி பேட்டையில முடியுற காக்கிகள் லிமிட்ல அடிக்கடி கால்நடைகள் களவு போகுதாம்.

இதுல குறிப்பா மாடுகள் களவு அதிகமாக நடக்குதாம்.. இந்த களவு தொடர்பாக பலமுறை, சம்பந்தப்பட்ட காக்கிகளுக்கு புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படாம இருக்குதாம்.. இரவு நேரத்துல, வேன்ல வந்து களவு செய்ற கும்பல், கால்நடைகளை ஆந்திராவுக்கு கடத்திட்டு போயிடுறாங்களாம்.. அவைகளை அங்க நடக்குற மாட்டு சந்தையில சேல்ஸ் செய்றாங்களாம்.. மாடுகளை வாங்க பேட்டை கிராம மக்கள், ஆந்திராவுக்கு போனா, அந்த சந்தையில திருட்டு மாடுகளை இவங்களுக்கே சேல்ஸ் செய்து விடுறாங்களாம்.. இதை பார்த்து அதிர்ச்சியான விவசாயிங்க தட்டிக்கேட்டிருக்காங்க..

ஆனா வேற ஸ்டேட் என்பதால கால்நடைகளை மீட்க முடியலைன்னு பாதிக்கப்பட்ட விவசாயிங்க புலம்பிட்டு இருக்காங்க.. இதனால வாணி பாடிய டிவிஷன்ல இருக்குற பேட்டை பார்டர் லிமிட் காக்கிகள் நிலையத்துக்கு அடிக்கடி மாவட்ட உயர் காக்கிகள் திடீர் ரெய்டு நடத்தினாத்தான், இதுபோல களவு பிரச்னைகள் கன்ட்ரோல் ஆகும்னு ஜனங்க எதிர்பார்க்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோவை தொகுதியில் போட்டிப்போட முரசு கட்சியிலும், இலைக்கட்சியிலும் கடும் மல்லுக்கட்டாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோவை மாவட்ட இலைக்கட்சியில் கடும் கசப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதுநாள் வரை கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும்…, வேட்பாளர் தயாராக இருக்கிறார்… என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது முரசு கட்சியுடன் கூட்டணி நெருங்கிவிட்டதால், அக்கட்சியை சேர்ந்த ஒருவர், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறாராம்.. இவர், கேப்டன் ரசிகர் மன்றம் காலத்தில் இருந்தே, கேப்டன் குடும்பத்தில் நெருக்கமாக இருக்கிறாராம்…

அதனால்தான், கட்சி ஆரம்பித்த பிறகும் இவரையே கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர வைத்துள்ளார்களாம்.. மேலிடம் எப்படியும் தனக்குத்தான் சீட் தரும்… என்ற எதிர்பார்ப்பில் இவர் காத்திருக்கிறாராம்.. அதே நேரத்தில், இலைக்கட்சியினர் இத்தொகுதியை கூட்டணிக்கு கொடுக்ககூடாது என்பதிலும் கவனமாக இருக்காங்களாம்.. எங்கே தனக்கு சீட் கிடைக்காதோ என்ற பயத்தில், இவர், இலைக்கட்சி முக்கிய நிர்வாகி ஒருவருக்கு, அடிக்கடி தூது விடுகிறாராம்… ஆனால், அந்த நபர் பிடி கொடுக்காமல் நழுவிச்செல்கிறாராம்.. ‘அண்ணே…

எடப்பாடியை பார்க்குறது வேஸ்ட்… உங்களை பார்த்தாலே போதும்… எல்லாம் சரியாகிவிடும்னு..’ முரசு கொட்டி வருகிறாராம். ஆனால், இலைக்கட்சி இடம் கொடுக்காமல் விலகுவதால், ஒரே முட்டலும், மோதலுமாக ஓடிக்கொண்டு இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பசையான வேட்பாளர் போட்டியில் இருந்து பின்வாங்கியதால தாமரைக்கு எதிரா சரியான ஆள தேடுகிறதாமே இலைக்கட்சி..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மக்களவை தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே திடீரென பசையான வேட்பாளர் ஒருவரை அறிவித்து கலகலக்க வைத்தது இலைக்கட்சி.

இப்போது வேட்பாளராக இருந்தவர் நான் போட்டிக்கு வரவில்லை என்று கூறிவிட்டதால அதனை நம்பி இருந்தவர்கள், அவரிடம் இருந்து பசையை கறக்க முடியாமல் போய்விட்டதேனு நொந்து போய் இருக்கிறாங்களாம்.. அடுத்து முன்னாள் மா.செ.வான பச்சையானவரை இப்போதைக்கு வளைத்து பிடித்து வைத்துள்ளார்களாம்.. தாமரை கட்சி வேட்பாளரை நிறுத்தும்போது அதற்கு போட்டியா இவர்தான் சரியான ஆளு என்று இலைக்கட்சி கருதுகிறதாம்.. இந்த முறையும் கடைசி நேரத்தில் தப்பி செல்லாத வேட்பாளரை நிறுத்தினால் சரிதான் என்கின்றனராம் ரத்தத்தின் ரத்தங்கள்…’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi