மும்பை: பிரபல நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவின் திடீர் மரணம், இந்திய திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பேசி வரும் நிலையில், ஷெஃபாலியின் மரணம் குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் தனது சருமத்தை வெண்மையாக்குவதற்காக வைட்டமின் சி மற்றும் குளுதாதயோன் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழல் திரையுலகில் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் செயற்கை அழகு சிகிச்சைகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நடிகை மல்லிகா ஷெராவத் கடந்த ஜூன் 29ம் தேதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எந்த ஃபில்டரும், மேக்கப்பும் நான் போடவில்லை. தலைமுடியை கூட சீவவில்லை.
நாம் அனைவரும் சேர்ந்து போடோக்ஸ் மற்றும் செயற்கை அழகு மாத்திரைகளுக்கு ‘நோ’ சொல்ல வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ‘ஆமாம்’ என்று கூறுவோம். ஆரோக்கியமான உணவு, நீரேற்றம், முன்கூட்டியே தூங்குதல் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றி இயற்கை அழகை மேம்படுத்துவோம்’ என்று அவர் வலியுறுத்தினார். மல்லிகாவின் இந்த கருத்து, பிரபல நடிகை ராக்கி சாவந்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லிகாவை கடுமையாக சாடி வீடியோ வெளியிட்டுள்ள ராக்கி சாவந்த், ‘என்ன இது? மல்லிகா ஷெராவத் தன்னை இயற்கை அழகி என்கிறாரா? போடோக்ஸ் காரணமாகத்தான் ஷெஃபாலிக்கு அந்த நிலை ஏற்பட்டதாக கூறுகிறாரா?.
மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகும் முன் எதுவும் பேச வேண்டாம். ஓடும் கங்கையில் நீங்கள் கை கழுவ வேண்டாம். உங்களால் யாருக்கும் நல்லது செய்ய முடியாவிட்டால், கெட்டதும் செய்யாதீர்கள்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார். ராக்கி சாவந்தின் இந்த பதிலடி, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.