மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் மேல்முகம் கிராமம் திருவேங்கடபுரத்தில், எலும்பு சேகரிப்பு குடோனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மல்லசமுத்திரம் அருகே மேல்முகம் கிராமம் திருவேங்கடபுரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் கடந்த 13 வருடங்களாக எலும்பு சேகரிப்பு குடோன் செயல்பட்டு வருகிறது. மாட்டிறைச்சி கடைகளில் எலும்பை சேகரித்து, குடோனில் இருப்பு வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்த குடோனை சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல்(47) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நாய்கள் குடோனுக்குள் புகுந்து மாட்டு எலும்புகளை கவ்வியவாறு அருகிலுள்ள விவசாய தோட்டத்திற்குள் சென்றுள்ளன. எலும்பை ருசித்த நாய்களின் பார்வை அங்கு கட்டி வைத்திருந்த செம்மறி ஆடுகள் மீது திரும்பியது. உடனே, ஆடுகள் மீது பாய்ந்து நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில், 3 ஆடுகள் குடல் சரிந்து உயிரிழந்தன.
இதனை அறிந்து அப்பகுதி மக்கள் திடுக்கிட்டனர். இதையடுத்து, நேற்று காலை குடோனை அகற்றக்கோரி 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், வி.ஏ.ஓ., சோபனா மற்றும் மல்லசமுத்திரம் போலீஸ் எஸ்.ஐ., ரஞ்சித்குமார், பஞ்சாயத்து தலைவர்கள் குழந்தைவேல், தனலட்சுமி ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுகாதார குறைவினை ஏற்படுத்தும் வகையில் செயல்படுமு் குடோனை அகற்ற உத்தரவிட்டனர். இதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.