புதுடெல்லி: மாலி நாட்டில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாலியில் உள்ள கெய்ஸ் நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்கள் மீது தீவிரவாதிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் காயேஸ் பகுதியில் உள்ள டைமன்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்த 3 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய கும்பல் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த மூன்று இந்தியர்களையும் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளது. மாலியில் இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்திய அரசு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாலி அரசை தொடர்புகொண்ட இந்திய அரசு, கடத்தப்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பான மற்றும் விரைவாக விடுவிக்கப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும் இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய அரசு இந்த வன்முறை செயலை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கிறது. பமாகோவில் உள்ள இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் டைமன்ட் சிமென்ட் தொழிற்சாலை நிர்வாகத்துடன் நெருக்கமான மற்றும் நிலையான தொடர்பில் உள்ளது. அவர்களது குடும்பத்தினருடனும் அரசு தொடர்பில் இருந்து வருகின்றது. மேலும் கடத்தப்பட்ட இந்திய குடிமக்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மாலி அரசை கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.