கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர் பேட்மின்டன் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அசத்தல் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் அயர்லாந்து வீரர் நாட் நுயெனை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்திருந்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், நேற்று நடந்த போட்டியில் பிரான்ஸ் வீரர் தோமா போபோவ் உடன் மோதினார்.
இப்போட்டியில் முதல் செட்டை 24-22 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை 17-21 என்ற புள்ளிக் கணக்கில் பறிகொடுத்தார். இருப்பினும், 3வது செட்டை அதிரடியாக ஆடி 22- 20 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்ரீகாந்த் வசப்படுத்தினார். அதனால் 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் அரை இறுதிக்கு முன்னேறினார்.
* கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி
கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்தியாவை சேர்ந்த வீரர் துருவ் கபிலா, வீராங்கனை தனிஷா கிராஸ்டோ இணை, சீன வீரர் ஜியாங் ஸென்பாங், சீன வீராங்கனை வெய் யாக்ஸின் இணையுடன் மோதினர். இப்போட்டியில் அபாரமாக ஆடிய சீன இணை, 24-22, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.