சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியாக்கு கடத்த முயன்ற 780 நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று இரவு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் செல்ல இருந்தது. அதில் பயணிக்க இருந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இப்ராகிம், யூசுப், அஸ்வத் ஆகியோர் வைத்திருந்த பெரிய அட்டை பெட்டிகளை சோதனை செய்ததில் அவற்றில் உயிருடன் 780 நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்துள்ளது.
அவற்றை பறிமுதல் செய்து 3 பேரின் பயணங்களையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். விசாரணையில் சதுப்பு நில பகுதிகளில் இருந்து இந்த நட்சத்திர ஆமைகளை பிடித்து கடத்தி செல்வதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோல கோலாலம்பூரில் இருந்து விமான மூலம் சென்னை வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவரிடம் 1500 இ-சிகரெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவற்றின் மதிப்பு ரூ.37 லட்சம் என தெரியவந்தது. அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.