*சுங்க துறையினர் அதிரடி
திருச்சி : திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று கடத்தி வரப்பட்ட இரண்டு மிக நீளமான பல்லிகளை வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பட்டிக் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு, பின்னர் வெளியில் செல்ல அனுமதித்தனர்.
ஒரு ஆண் பயணிக்கு சொந்தமான உடமைகளை ஸ்கேன் மிஷின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போது, சூட்கேசிற்குள் ஏதோ ஒன்று அசைவது போல தென்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்கேனர் மிஷின் சமிஞ்சை ஒலி எழுப்பி உள்ளது. இதையடுத்து அந்த சூட்கேஸை அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை மேற்கொண்டனர்.
அதில், திண்பண்டங்களுக்கு நடுவில் 1.5 அடி நீளம் உள்ள இரண்டு ராட்சத பல்லிகள் இருந்துள்ளன. அந்த பல்லிகளின் கால்கள் அசையாமல் இருக்க டேப் சுற்றப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அந்த இரண்டு பல்லிகளையும் கைப்பற்றிய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர், அதை கடத்தி வந்த, ஆண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தி கொண்டு வரப்பட்ட பல்லிகள், நியூ கினியாவிற்கு என்ற நாட்டில் வாழக்கூடிய மிகப்பெரிய மானிட்டர் பல்லி இனம். இதனை முதலை மானிட்டர் என்றும் அழைப்பார்கள். இது பழங்குடியினரால் மட்டுமே வேட்டையாடப்பட்டு வருகிறது.
இதனை முதலை கண்காணிப்பாளர்கள் என்றும் கூறுகிறார்கள். வாஸ்து பல்லியாக வளர்க்கப்படும் இதனை எதற்காக கடத்திவந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவற்றை மீண்டும் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஆலோசனையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.