சென்னை: மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது தாலியை கழற்ற கூறியதாக பெண் கூறிய புகார் குறித்து சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு தம்பதி, கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா வந்தனர். விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு வந்தபோது, அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் ரூ.50,000 மதிப்புள்ள தங்க நகை மட்டுமே கொண்டுவர விதிகள் அனுமதிக்கிறது. அந்த பெண் அளவுக்கு அதிகமாக நகை அணிந்திருந்ததால் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர்.
அதற்கு அந்த பெண், நான் தாலி அணிந்து இருக்கிறேன். அவற்றை கழற்றி தரமுடியாது என்று கூறி தான் எத்தனை சவரன் நகை கொண்டு வந்துள்ளார் என்பதை கூற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவருடைய கணவரின் நகைகளை வாங்கி கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவர்கள் மலேசியாவுக்கு திரும்பி செல்லும் போது நகைகளை வாங்கி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதிகாரிகள் வற்புறுத்தலை அடுத்து அப்பெண்ணின் கணவர் நகைகளை மதிப்பிட அனுமதித்தார். பின்னர், அந்த பெண் சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வீடியோ பதிவிட்டு உள்ளார்.
இந்நிலையில், மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது தாலியை கழற்ற கூறியதாக பெண் கூறிய புகார் குறித்து சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. நகைகளை மதிப்பிட்டபோது 35 சவரன் இருப்பது கண்டறியப்பட்டு சுங்கவரியாக ரூ.6.5 லட்சம் விதிக்கப்பட்டது. சுங்க வரியை கட்ட மறுத்ததால் அவர்களின் நகைகளை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்தனர். ஜூலை 23-ம் தேதி அப்பயணி மலேசியா திரும்பி சென்றபோது நகை திருப்பி ஒப்படைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளது.