Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி எண்ணூர் தனசேகர் திடீர் உண்ணாவிரதம்: சிசிடிவி கேமராவை உடைத்ததால் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு

சென்னை: கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலையில் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகர், கடந்த இரண்டு வருடங்களாக கைதியாக உள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை அலுவலர் மணிகண்டனுக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்துக்கொண்டு மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சித்ததாக எண்ணூர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணூர் தனசேகரின் தம்பி உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கைதி எண்ணூர் தனசேகர் மத்திய சிறையிலேயே இரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடலூர் மத்திய சிறையில் கைதிகளின் பொழுதுபோக்குக்காக மாலை நேரங்களில் தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை கைதிகள் பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் கைதி எண்ணூர் தனசேகர் தனக்கு பிடித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்றும், மலையாளத்தில் வரும் நாடகங்களை ஒளிபரப்ப வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் சிறை அதிகாரிகள் கைதிகள் அனைவரும் சமம். ஒரு கைதிக்காக மட்டும் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எண்ணூர் தனசேகர் மத்திய சிறையில் இருந்த 2 சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எண்ணூர் தனசேகர் நேற்று காலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.