ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையால் மலையாள திரைப்பட உலகமே பெரும் கலக்கத்தில் உள்ளது. இதில் பிரபலங்கள் பலரும் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மலையாள பட உலகின் பிரபல நடிகை ஒருவர், கும்பலால் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் சொல்லித்தான் நடிகையை பலாத்காரம் செய்ததாக கைதானவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. இதனால் மலையாள சினிமா உலகின் நடிகைகள் பலரும் கொதித்து எழுந்தனர். இதையடுத்து நடிகைகள் பார்வதி திருவோத்து, ரேவதி, பத்மப்பிரியா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இணைந்து ‘உமன் இன் சினிமா கலெக்டீவ்ஸ்’ என்ற குழுவை ஏற்படுத்தினர். இவர்கள் ஒருங்கிணைந்து மலையாள சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கினர்.
2019ம் ஆண்டு முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பெண் கலைஞர்கள் மீதான பாலியல் தொல்லைகள் களைய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடும்படி கேட்டனர். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா குமாரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் முன்னணி நடிகைககள் உள்பட 53 பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி 2019ம் ஆண்டே டிசம்பரில் அறிக்கை சமர்ப்பித்துவிட்டனர்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பார்த்துக்கொண்டனர். காரணம், இந்த அறிக்கை வெளியானால் பல பெரும் தலைகள் உருளும் என்பதால். இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பலர் இந்த அறிக்கையை வெளியிட கோரி வந்தனர். இதை விசாரித்த கேரள தகவல் உரிமை ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது. வாக்குமூலம் அளித்தவர்களின் பெயர்களையும், தனி நபரின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் விவரங்கள் இருந்தால் அதையும் நீக்கிவிட்டு அறிக்கையை வெளியிடவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட கேரள அரசு தயாரானது. ஆனால் அறிக்கையை வெளியிட்டால் பலரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும், மேலும் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அறிக்கையை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மலையாள சினிமா தயாரிப்பாளர் சஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 233 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்த பல்வேறு பகீர் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த அறிக்கையில் பெண் கலைஞர்கள் மீது கொடுமைகள் புரிந்த நபர்களின் பெயர்கள் இருந்தது. ஆனால் அவை வெளியிடப்படவில்லை. இதனால் இந்த அறிக்கை வெளியானதும் சில நடிகைகள் துணிச்சலுடன் பேச முன்வந்துவிட்டனர். அதில் 4 மலையாள நடிகைகளும் ஒரு வங்காள நடிகையும் முக்கியமானவர்கள். மலையாள நடிகை ஒருவர் பிரபல நடிகர் சித்திக் தன்னை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார். சித்திக், மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். அதேபோல் வங்காள நடிகை, மலையாளத்தில் நடித்தபோது, மலையாள இயக்குனர் ரஞ்சித் தன்னை மானபங்கம் செய்ததாக கூறினார்.
ரஞ்சித், மலையாள சினிமா அகடாமி தலைவராக இருந்தார். இந்த புகாரை அடுத்து, இவர்கள் இருவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். சித்திக் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துவிட்டனர். அதேபோல் ஒரு நடிகை, நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியன்பிள்ளை ராஜு ஆகியோர் மீது மானபங்க புகார் கூறியிருக்கிறார். மற்றொரு நடிகை இயக்குனர் துளசிதாஸ் மீது புகார் கூறியுள்ளார். இந்நிலையில் மலையாள நடிகர் சங்கத்திலும் பிரச்னை வெடிக்க ஆரம்பித்தது. சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது நடவடிக்கை கோரி நடிகர்கள் டோவினோ தாமஸ், வினு மோகன், நடிகைகள் அனன்யா, சரயு ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து நடிகர் சங்கத் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துவிட்டார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானால் அது கண்டிப்பாக ஒரு பெரும் பூதகரமான சம்பவத்தை வெளிப்படுத்தும் என்பதால்தான் இத்தனை ஆண்டுகள் அந்த அறிக்கையை வௌியிடச் செய்யாமல் மலையாள ஆண் கலைஞர்கள் பார்த்துக்கொண்டார்கள். இப்போது அறிக்கை வந்ததும் எதிர்பார்த்த பூதம் வெளியே வந்துவிட்டது. இனி ஒவ்வொருவரும் சிக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அதே சமயம், இந்த கமிட்டியின் அறிக்கையில் முன்னணி நடிகைகள் என்ன சொன்னார்கள் என்பது தெளிவாக இல்லை என்றே கூறப்படுகிறது. பல முன்னணி நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானாலும் அதை அவர்கள் மறைக்கிறார்கள் என்று இன்னொரு தரப்பு நடிகைகள் சொல்கின்றனர். காரணம், புகார் சொன்ன நடிகைகளுக்கு இப்போது பெரிதாக படங்கள் கிடையாது. ஆனால் மற்ற நடிகைகள் அப்படி அல்ல. படங்களில் நடிக்கிறார்கள். குறிப்பிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது அவர்கள் புகார் சொன்னால் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என பயப்படுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
சினிமா உலகை பொருத்தவரை, மீடூ என்ற ஒரு இயக்கம் சமீபத்தில் பெரும் புயலை கிளப்பியது. அதேபோலத்தான் இப்போது ஹேமா கமிட்டியும், பார்க்கப்படுகிறது. ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கை மீடூ போல் அடங்கிப்போய் விடக் கூடாது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆண் கலைஞர்களின் பெயர்கள் வெளியே வர வேண்டும். அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைப்பதையும் கேரளா அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
* ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை
மலையாள இளம் நடிகர் நவஜீத் நாராயணன் கூறும்போது, ‘பெண்களுக்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவில் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை. எனக்கு நன்றாக தெரிந்த ஒரு ஆண் இயக்குனர், என்னிடம், ‘உனக்கு நடிக்க வாய்ப்பு தந்தால் எனக்கு என்ன தருவாய்’ எனக் கேட்டார். பிறகு என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவரை அறைந்துவிட்டு வந்துவிட்டேன்’ என்றார்.
* மோகன்லால் ராஜினாமா ஏன்?
ஹேமா கமிட்டி அறிக்கை விஸ்வரூபம் எடுத்ததும் நடிகர் சங்கத்திலேயே பிளவு ஏற்பட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டு மோகன்லால் அஞ்சவில்லையாம். அதே சமயம், இதற்கெல்லாம் பதில் சொல்லி, நடவடிக்கைகள் எடுத்து யாரையும் பகைத்துக் கொள்ளாதே என லாலுக்கு ரொம்பவே நெருக்கமான ‘அந்த’ நடிகர் கொடுத்த அட்வைஸ் காரணமாகவே லால் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டது.
* அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?
ஹேமா கமிட்டி அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய விவரங்கள்:
* யாராக இருந்தாலும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் படுக்கையை பங்கிட்டால்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.
* கிரிமினல்கள் மற்றும் மாபியாக்களின் கைகளில் தான் மலையாள சினிமா உலகம் உள்ளது. அவர்கள்தான் மலையாள சினிமாவை ஆட்டிப் படைத்து வருகின்றனர்.
* கவர்ச்சி உடைகளை அணிந்தால் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். இறுக்கமான உடைகளை அணிய நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
* படப்பிடிப்பு நடக்கும்போது ஓட்டல்களில் தனியாக தங்குவதற்கு பல நடிகைகளும் அஞ்சுகின்றனர். இரவாகிவிட்டால் நடிகைகளின் அறைக்கதவு தட்டப்படும். திறக்காவிட்டால் மிகவும் பலமாக கதவைத் தட்டி பயத்தை ஏற்படுத்துவார்கள்.
* ஜூனியர் நடிகைகள் அனுபவிக்கும் கொடுமைகள் இதைவிட அதிகமாகும். நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களது அறைக்கு சென்று விட வேண்டும்.
* படப்பிடிப்புத் தளங்களில் சிறுநீர் கழிக்கக் கூட ஜூனியர் நடிகைகளால் தனியாக செல்லமுடியாத நிலை உள்ளது. இதனால் தனக்கு வேண்டப்பட்டவர்களை அழைத்து மறைவான இடத்திற்கு சென்று துணியால் மறைத்துத் தான் இவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டிய மிக மோசமான நிலை உள்ளது.
* பலரும் உயிருக்கு பயந்து தான் இந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் சகித்துக் கொண்டுள்ளனர். போலீசிலோ, வேறு யாரிடமோ புகார் செய்தால் உயிருடன் இருக்க முடியாது என்பது தான் இதற்கு காரணமாகும்.
* முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்டது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. இதுபோல பல கொடூர சம்பவங்கள் மலையாள சினிமாவில் நடந்துள்ளது. மதுவும், போதைப்பொருளும் சர்வ சாதாரணமாக புழங்குகிறது.
* ஒரே ஷாட்டை மீண்டும் மீண்டும் எடுத்து தங்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகளை சில டைரக்டர்கள் துன்புறுத்துவார்கள்.
* ஆசைக்கு இணங்கினால் தான் நல்ல சாப்பாடே கிடைக்கும்.
* மலையாள சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் இந்த கொடூர செயல்களில் தொடர்பு உண்டு. அவர்களுக்குத் தெரிந்தது தான் பல குற்றங்களும் நடைபெறுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.