திருவனந்தபுரம்: மலையாள சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் பரீக்குட்டி (32). எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த இவரது இயற்பெயர் பரீதுதீன் ஆகும். நேற்று முன்தினம் இடுக்கி மாவட்டம் மூலமற்றம் கலால்துறை அதிகாரிகள் வாகமண் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு காரை கலால் துறையினர் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்தக் காரில் வேட்டை நாய் இருந்ததால் அதிகாரிகளால் சோதனை நடத்த முடியவில்லை. காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரும் வாகனத்தை விட்டு இறங்க மறுத்தனர்.
தொடர்ந்து கலால் துறையினர் அவர்களை காரை விட்டு இறக்கினர். அந்தக் காரில் இருந்தவர்கள் பிரபல மலையாள சினிமா மற்றும் டிவி நடிகர் பரீக்குட்டி, அவரது நண்பர் கோழிக்கோட்டை சேர்ந்த ஜிஸ்மோன் (24) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கலால் துறையினர் சோதனை நடத்தியதில் நடிகர் பரீக்குட்டியிடமிருந்து 230 மில்லி கிராம் எம்டிஎம்ஏ, 4 கிராம் கஞ்சாவும், ஜிஸ்மோனிடமிருந்து 11 கிராம் எம்டிஎம்ஏவும், 5 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.இதையடுத்து 2 பேரையும் கலால் துறையினர் கைது செய்தனர். இருவைரயும் தொடுபுழா மாஜிஸ்திரேட் முன்பு அதிகாரிகள் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.