திருவனந்தபுரம்: படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாக மலையாள நடிகர் பாபுராஜ் மீது துணை நடிகை பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். 2019ல் ஆலுவாவில் உள்ள வீட்டுக்கு அழைத்து தொல்லை தந்ததாகவும் துணை நடிகை புகார் அளித்துள்ளார்.
இன்று காலை முதல் பல மலையாள நடிகைகள் தாமாக முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர். தற்போது பாபுராஜ் என்ற நடிகர் தான் வாய்ப்பு கேட்க சென்றபோது தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார் என துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரக்கூடிய மலையாள நடிகைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தான் நடிக்க வாய்ப்பு கேட்க சென்றபோது நடிகர் பாபுராஜ் தன்னை அவரது இல்லத்திற்கு அழைத்ததாகவும், அப்போது தான் அறையில் அமர்ந்திருக்கும்போது பாபுராஜ் தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காக முயற்சி செய்ததால் தான் அங்கிருந்து தப்பித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
பாபுராஜ் முன்னணி நடிகர் என்பதால், தான் கொடுக்கும் புகார்கள் பெரிதும் பேசப்படாது என கருதி புகார் அளிக்கவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை முதல் மலையாள நடிகைகள் தாமாக முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளை குறித்து வெளிப்படையாக பேசி வருவது கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.