கோலாலம்ப்பூர் :2014ம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்எச்370 இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிய இடத்தை தான் கண்டுபிடித்துவிட்டதாக டாஸ்மானிய பல்கலைக்கழக விஞ்ஞானி வின்சென்ட் லைன் தெரிவித்துள்ளார். 2014 மார்ச் 8ம் தேதி கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவை நோக்கி மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எச்370 விமானம் சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்பட்டது. 227 பயணிகள், 12 ஊழியர்கள் என்று 239 பேர் பயணித்த அந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்திய பெருக்கடலில் வியட்நாம் வான்வெளியில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென மாயம் ஆனது. இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன. எனினும் விமானம் விழுந்த இடத்தை கண்டறிய முடியாததால் விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
விபத்து நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட சூழலில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானி வின்சென்ட் லைன் தெரிவித்துள்ளார். இது குறித்த கட்டுரையை வெளியிட்டுள்ள அவர், எம்எச் 370 மர்மம் அறிவியலால் அகன்றது என்று அதற்கு தலைப்பிட்டுள்ளார். அந்த ஆய்வு கட்டுரையில், இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்கே 6,000 மீ. ஆழ துளையில் விமானம் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகளைக் கொண்ட இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் விமானம் மறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விபத்து விமானியால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாகவும் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இந்திய பெருங்கடலில் 7வது வளைவில் விமானம் விழுந்ததாக வெளியான தகவலை மறுத்து, விபத்துக்குள்ளான விமானத்தில் எரிபொருள் இருந்தது என்றும் உறுதிப்பட தெரிவித்தார். விமானம் விழுந்த இடம் கரடுமுரடான ஆபத்தான சூழலுக்குள் 6,000 மீட்டர் ஆழம் என்றும் அதில் விழுந்தால் விமானத்தை கண்டுபிடிப்பது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.