‘‘கட்சியில இருந்து போனவரு வரிசை எண் எழுதி வெச்சி யார் வர்றாங்கன்னு காத்திருக்குறாராமே தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘பெயரில் மான் வெச்சிருக்குற கட்சியை சேர்ந்தவருக்கு இப்ப நேரமே சரியில்லை போலன்னு பாக்குறவங்க எல்லாம் பரிதாபப்பட்டு பேசுற மாதிரி ஆகிப்போச்சு.. ஆனாலும் அவரு, இலையுதிருது, கிளையுதிருதுன்னு எதுகை மோனையில பேசி கூட இருக்குறவங்களை தேத்தி வர்றாரு.. அப்படி இருந்தும் கிளைகள் உதிர்ந்து வேரோடு சாய்ந்திடும் நிலைமைக்கு கட்சி போய்கிட்டிருக்குதாம்..
இந்த நிலைமையில குயின்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செக்ரட்ரி ஒருத்தரு, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்ன வெச்சி, கட்சியில இருந்து விலகிட்டாரு.. இவரை தொடர்ந்து மாவட்டத்துல பல பொறுப்புகள்ல இருந்து பலபேர் விலகுவதற்கு தயாராகி வர்றாங்களாம்.. இதனால விலகி போன மாஜி மாவட்ட செக்ரட்ரி, யார் என்கூட வர்றீங்கன்னு பட்டியல்ல வரிசை எண் எழுதி வெச்சி காத்திருக்கிறாராம்.. இதனால கோணம் பாதியான தொகுதியிலயும், சோ என்று தொடங்கி லிங்கர்ல முடியுற தொகுதியிலயும், மான் பார்ட்டியோட கூடாராம் முழுவதுமாக காலியாகிடும்னு பேசிக்கிறாங்க..
போகிற போக்க பார்த்த ஸ்டேட் புல்லா இந்த நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லன்னு பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சியின் தலைமையை பற்றி புகழ்பாடிய மாஜி அமைச்சரின் பேச்சால் இலைக்கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மஞ்சள் மாவட்டத்தில் இலைக்கட்சி நிறுவனர் பிறந்த நாள் விழா நடந்திருக்கு.. இந்த விழாவில் சோப்பு நுரை புகழ் மாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகிட்டாரு.. கூட்டத்தில இலை கட்சி தலைமையை புகழ்ந்து பேசுனதைவிட தமிழ்நாட்டில் மலராத பூ கட்சியின் தேசிய தலைமையை பத்தி புகழ்ந்து தள்ளினாராம்..
கூட்டணியில எக்காரணம் கொண்டும் பூ கட்சியை சேர்க்கக்கூடாதுன்னு இலைக்கட்சி சேலம் விஐபி உறுதியா இருக்கிற சூழலில் சேலம் விஐபியின் நிழலாகவும், குரலாகவும் இருக்கக்கூடிய சோப்பு நுரை புகழ் மாஜி, பூ கட்சி தலைமையை பத்தி புகழ்ந்து தள்ளினது கூட்டத்துல கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்காம்.. ஏற்கனவே மஞ்சள் மாவட்டத்தில் ரெட்போர்ட் மாஜி பூ கட்சியோட கூட்டணி வைக்கணும்னு போர்க்கொடி தூக்கி இருக்கிறாரு.. இது ரெட்போர்ட் குரல் மட்டும் இல்லையாம்..
மேற்கு மண்டபத்தில் இருக்கக்கூடிய இலைக்கட்சி மாஜிக்களின் குரல்ன்னு சொல்லப்பட்டுச்சு… இந்த பிரச்னை கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில இப்ப சோப்பு நுரை புகழின் பேச்சு இலைக்கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சியில் ரெண்டாவது தடவையாக அதே பதவி கிடைத்ததால் முக்கிய நிர்வாகிக்கு எதிராக மற்ற நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தை சேர்ந்த தாமரை கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், மீண்டும் அதே பதவிக்கு வந்துள்ளாராம்..
மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு 2வது தடவையாக அதே பதவி வழங்கப்பட்டுள்ளதால் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.. இதனால் மாவட்டத்தில் உள்ள மற்ற சில நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, கட்சிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்திருக்காங்க.. இதற்கான திரைமறைவு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.. இந்த தகவல் தெரிய வந்த அந்த முக்கிய நிர்வாகியும் திரைமறைவான வேலைகளை செய்து முடித்து விட்டாராம்..
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான சில நிர்வாகிகள், அந்த முக்கிய நிர்வாகிக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடிவு செய்திருக்காங்களாம்.. இந்த டாப்பிக் தான் மாவட்டம் முழுவதும் தற்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நான்கு வருடமாக தொகுதி அலுவலக கதவையே திறக்காத மலராத கட்சி எம்எல்ஏக்கு மீண்டும் சீட்டு கொடுக்க விடமாட்டோம் என கங்கணம் கட்டுகிறதாமே எதிர்தரப்பு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சட்டமன்ற அலுவலகம் பக்கமே போக வில்லை என்றாலும், அடுத்த முறையும் அண்ணனுக்கு தான் சீட் என தாமரை கட்சி எம்எல்ஏ ஆதரவாளர் இப்போதே, தன்னை சந்திக்கும் கட்சிக்காரர்களிடம் உறுதியாக கூறி வருகிறாராம்.. தாமரை கட்சியில் மகாத்மா பெயரை கொண்ட எம்எல்ஏ தான் பொறுப்பேற்ற நாளில் இருந்து அந்த தொகுதிக்கான சட்டமன்ற தொகுதி அலுவலகம் பக்கமே போக வில்லையாம்.. இப்போது அந்த அலுவலகம் புதர் மண்டி, பூச்சிகளின் இல்லமாக மாறி இருக்கிறதாம்.. அலுவலகம் இருக்கும் இடம் ராசி கிடையாதாம்.. ஒருமுறை அந்த அலுவலகத்துக்குள் எம்எல்ஏவாக போனா, அடுத்த முறை வாய்ப்பு இருக்காதாம்..
இதனால கடந்த 4 வருஷமா சட்டமன்ற அலுவலக கதவை கூட திறக்காமல் போட்டு இருக்காங்க.. தொகுதியில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் இப்படி கிடக்குதே என மற்ற கட்சிக்காரங்க எம்எல்ஏவுக்கு நெருக்கமானவர் கிட்ட கேட்க, அடுத்த முறையும் எங்க அண்ணனுக்கு தான் சீட். அவரு தான் ஜெயிச்சி காட்டுவாரு என கூறினாராம்..
இந்த தகவல் தாமரை கட்சி எம்எல்ஏவின் எதிர் தரப்புக்கு போக, கொடுப்பாங்க… கொடுப்பாங்க… நாங்க என்ன புளியங்கா பறிக்கவா இந்த கட்சியில இருக்கோம்… சீனியரு என்று ஒருமுறை உட்கார வைச்சு அழகு பார்த்தாச்சு.. அதுவும் எந்த பிரயோஜனமும் இல்லை.. இனி அது நடக்க விட மாட்டோம் என்கிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.