‘‘இலை கட்சி முக்கிய நிர்வாகி திடீர் ஆக்டிவாக இருப்பது ஏன்?’’ என கேட்டார் பீட்டர் மாமா’’.
‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகி தற்போது ஆக்டிவாக இருந்து வருகிறாராம்.. இது இலை கட்சியின் நிர்வாகிகளுக்கு ‘இன்ப’ அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.. நிர்வாகிகளே, முக்கிய நிர்வாகியின் செயல்பாட்டை பார்த்து, அதிர்ச்சி அடைந்து வருகிறார்களாம்.. ஐஸ் வைப்பதற்காக இந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருப்பதை போல் காட்டிக் கொள்கிறாராம் அந்த முக்கிய நிர்வாகி… தேர்தல் நெருங்குவதால், ஆக்டிவாக இருப்பது போல் காட்டிக் கொண்டால் தான், தலைமையிடம் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என அவர் நினைக்கிறாராம். அதற்காக தான், ஆக்டிவாக இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நியமன பிரதிநிதி வீட்டில் நகை திருட்டு விவகாரத்தில் வட்டமடிக்கும் காக்கிகள் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆன்மிக பூமியான பாண்டியில் சைபர் குற்றங்கள் அதிகரித்தபடி உள்ளதாம்.. நாட்டிலேயே அதிக மோசடிகள் நடைபெறும் பட்டியலில் பாண்டியும் பங்கெடுத்து விட்டதாம்.. பேராசைக்காரர்களே அபூர்வ வலையில் சிக்கி பணத்தை பறிகொடுத்து நிற்பதாக அதிகாரிகள் புலம்புகிறார்களாம்.. நிலைமை இப்படியிருக்க பவர்புல் தாமரை கொண்டுவந்த நியமன பிரதிநிதிகளில் ஒருவரான நல்லஎண்ணம் கொண்டவரின் வீட்டில் 15 சவரன் நகை பறிபோய் இருக்கிறதாம்.. சிசிடிவி கேமராக்கள் இருந்தும் நகர பகுதியிலுள்ள அவர் வீட்டின் முதல்மாடியில் பீரோவிலிருந்த நகைகள் திடீரென மாயமாகி இருப்பது பற்றி காவல் நிலையம் வரையிலும் புகார் பறந்துள்ளதாம்.. நன்கு அறிமுகமானவர்களே கைவைத்திருக்க முடியும் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழ, சிலரை வட்டமடித்து கண்காணித்து வருகிறார்களாம்.. இச்சம்பவத்தால் சட்டம்- ஒழுங்கு தொடர்பான விமர்சனங்களும் தாமரை அதிருப்தி வட்டாரத்தில் எழுந்துள்ளதாம்..’’ விக்கியானந்தா.
‘‘கதர் கட்சியை கைகழுவிவிட்டு மலராத கட்சிக்குப்போன விஜயமான பெண்மணி திடீரென மகிழ்ச்சியில் இருக்கிறாராமே என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் கதர்கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு எம்எல்ஏ பதவியும் வேண்டாம் என முடிவெடுத்து மலராத கட்சியில் இணைந்த விஜயமானவருக்கு இதுவரை கட்சியில் முக்கிய பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கடைக்கோடி தொகுதியில் தனக்குத்தான் சீட் என ரொம்பவே நம்பித்தான் அவர் கதர் கட்சியை கைகழுவினாராம்.. ஆனால் கடைசியில் தேரை இழுத்து தெருவில் விட்டாற்போல் விட்டுவிட்டு சென்று விட்டார்களாம்.. பிறகு தனக்கு கட்சியில் பெரிய பொறுப்பு கிடைக்கும் என்று நம்பியவர் அது கிடைக்காததால் அகில இந்திய தலைவர்கள் இருக்கின்ற கூட்டங்களில் தனக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்று பேசி ஓபனாகவே குறைபட்டுக்கொண்டிருந்தார். இப்போது விஜயமானவருக்கு மாநில துணை தலைவர் பொறுப்பு வழங்க அகில இந்திய தலைமைக்கு புதிய தலைவர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூடுதல் தொகுதிக்கு ஐடியா போட்டுத்தான் ஆட்சியில் பங்கு பங்கு என சில கட்சிகள் கூவிக்கொண்டு இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆட்சியில் பங்குன்னு சொல்லியாவது யாராவது கூட்டணிக்கு வரமாட்டாங்களான்னு ஆக்டரின் பார்ட்டியும், மலராத கட்சியும் ஓங்கி கூவிக்கிட்டு இருக்காங்களாம்.. அது நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது, அவர்களை நம்பி போனால், அரசனை நம்பி புருசனை விட்ட கதையாகி விடும் என தெரிந்து எந்த கட்சியும் திரும்பிக் கூட பாக்கலையாம்.. அதே போல எல்லோரும் சந்தைக்கு போறாங்க நானும் சந்தைக்கு போறேன்னு சிதறுண்டுபோன கதர் சட்டை கட்சியும் புதுகோஷத்தை கையில் எடுத்திருக்காங்களாம்.. எங்களுக்கும் ஆட்சியில் பங்கு தருவதுடன் கூடுதல் தொகுதி தரணுமுன்னு சொல்றாங்களாம்.. ஆனால், அந்த கட்சியில் தலைவர்களை தவிர தொண்டர்கள் யாராவது இருக்கிறார்களா என்றால் அவர்களுக்கே தெரியாதாம்.. இதை கேட்கும் மூத்த கதர் கட்சிக்காரங்களே சிரிப்பாய் சிரிக்கிறாங்களாம்.. 40 ஆண்டுகளுக்கு முன்பே கதர்கட்சியில் இருந்த தொண்டர்கள் சிதறுண்டு போனாங்களாம்.. அந்த கட்சிக்கு புதிய தலைமுறையே கிடையாதாம்.. 35 வயதுள்ளவர்களை கணக்கிட்டால் சொல்லிக்கொள்ளும் வகையில் யாருமே இல்லையாம்.. இவர்களின் வேட்புமனுவுக்கு முன்மொழிவதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலையில்தான் இருக்காங்களாம்.. கட்சியின் டெல்லி தலைமை மீதான அன்பு காரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 25 சீட் கொடுக்கப்பட்டதாம்.. அதோடு அவர்களை வெற்றிபெற வைக்க கடும் சிரத்தை எடுத்துதான் கூட்டணி கட்சியின் தலைமை ஜெயிக்க வச்சதாம்.. இதையெல்லாம் மறந்துபோன கதர் சட்டைக்கார்கள் கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு என குறுக்குசால் ஓட்டுவதாக கட்சிக்காரங்களே சொல்றாங்க.. இதை யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதற்கு சமமுன்னும் சொல்லும் கதர்கட்சிக்காரங்க இதெல்லாம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சிதான்னும் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணியில் சேர்ந்த நிலையில் இப்போதே ஐம்பது, எழுபது என தொகுதி எண்ணிக்கை பற்றி பேசும் மலராத கட்சியினரால் இலைக்கட்சியினர் கவலையில் துவண்டு போயிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியுடன் கூட்டணி சேர்ந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் மலராத கட்சியினர் உற்சாகமாக வலம் வர்றாங்க.. அவ்வப்போது இலை கட்சித் தலைமையை விமர்சிக்கவும் தவறுவதில்லை.. ஆனால் இலை கட்சியினரோ துவண்டு போயிருக்காங்க.. இப்போதே 50 தொகுதிகள், 70 தொகுதிகள் என்கின்றனரே, நமது தொகுதிகளுக்கு பங்கம் வந்து விடுமோ என்பதுதான் அவர்களின் கவலை. இந்த விவகாரம்தான் அல்வா, முத்து உள்ளிட்ட தென் மாவட்ட இலை கட்சியினரின் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது.. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அல்வா தொகுதியை நமது கட்சியில் இருந்து விலகி மலராத கட்சியில் இணைந்தவர் பறித்துக் கொண்டார். இப்போது கட்சியின் மாநில தலைவரும் அவரும்தான். அப்படியானால் இந்த தேர்தலிலும் அல்வா தொகுதி தேசிய கட்சிக்கு தாரை வார்க்கப்பட்டு விடும்.. இப்படியே போனால் நமக்கு எப்படி தொகுதி கிடைக்கும் என அல்வா மாவட்டத்தினர் பட்டிமன்றம் போடாத குறையாக பேசி வர்றாங்க.. கடந்த முறை மலராத கட்சி 4 இடங்களில் தான் வென்றது. அதில் ஒன்று அல்வா மாவட்டம், மற்றொன்று எல்லையோர குமரி மாவட்டம். இந்த முறை கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை மலராத கட்சி கேட்டால் என்ன செய்வது? முத்து மாவட்டத்தில் ஏற்கனவே மக்களவை தொகுதியில் இரு முறை களம் இறங்கிட்டாங்க… அதை வைத்துக் கொண்டு சட்டமன்ற தேர்தலிலும் கேட்டால் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா என இலை கட்சியினரின் புலம்பல்தான் தென் மாவட்டங்களில் ஒலிக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.