மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பால் ஆதிதிராவிடர் பள்ளி தற்போது பசுமையான பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த, பள்ளியில் கற்பூரவல்லி, ஆடாதொடை, செம்பருத்தி, தைலம், தூதுவளை, பிரண்டை, நொச்சி, நுனா, கற்றாழை, வெற்றிலை முடக்கத்தான் உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் இந்த பள்ளியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு, மாணவரும் மூலிகை செடிகளை, வெளியில் இருந்து வாங்கி வந்து தினந்தோறும் அதற்கு நீர் ஊற்றி தனியாக பராமரித்து வருகின்றனர். வெறும் மரங்கள் மட்டுமே இருந்த பள்ளி தற்போது மூலிகை தோட்டமாக மாறி உள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் இப்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி பள்ளி மாணவர்கள் கூறும்போது, ‘ஒவ்வொரு செடிகளின் மருத்துவத்தை பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும், மூலிகை மருத்துவர் போன்று அழகாக நம்மிடம் விளக்கினார்கள். பல்வேறு அரசு பள்ளிகள் மத்தியில் மாமல்லபுரம் அடுத்த மணமை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மூலிகை செடி வளர்ப்பதில் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. மூலிகை செடிகளின் பயன்பாடு மற்றும் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ள நாமும் இந்த பள்ளிக்கு செல்லும்போது மூலிகை செடிகளை பற்றி தெரிந்து கொண்டால் நமக்கும் பயனுள்ளதாக இருக்கும் நாமும் வீட்டில் மூலிகை செடிகளை வளர்த்து பயன் பெறலாம்’ என்றனர்.
இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் கூறுகையில், ‘மரங்களால் சூழப்பட்டிருந்த பள்ளி இப்போது மூலிகை தோட்டமாக மாறியிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வரும்நிலையில், அவை குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தினமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த, செடிகளை மாணவர்கள், ஆரிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகம் ஆகியவை ஒன்றிணைந்து சொந்த செலவில் வாங்கி பராமரித்து வருகின்றனர்’ என்றனர். அரசு, பள்ளிகள் என்றால் சுத்தமான கழிப்பறை வசதிகள், இடவசதிகள் இருக்காது என குறைபாடுகள் இருந்தநிலையில், தற்போது இந்தநிலை மாறி தனியார் பள்ளிகளுக்கு நிகராக சில அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு, மாணவரும் மூலிகை செடிகளை, வெளியில் இருந்து வாங்கி வந்து தினந்தோறும் அதற்கு நீர் ஊற்றி தனியாக பராமரித்து வருகின்றனர்.