ட்ரெண்டிங் ஆகும் ஸ்கூட்டர் பார்பிக்யூ!
சென்னை போன்ற பெருநகரங்களில் அழகான இன்டீரியருடன், தீம் மியூசிக் பின்னணியில் கொண்டாட்டம் தரும் உணவகங்கள் நிறைய இருக்கின்றன. அங்கெல்லாம் கிடைக்காத ருசியை சாலையோரத்தில் இயங்கும் ஒரு வண்டிக்கடை கொடுத்துவிடும். இதுபோன்ற பல கடைகளுக்கு ரெகுலர் கஸ்டமர்களும் அதிகரித்து இருக்கிறார்கள். சென்னையில் தற்போது ஃபுட் ட்ரக், புல்லட் ஃபுட், பைக் பார்பிக்யூ ஃபுட் என பல மாடர்னான உணவகங்கள் கோலோச்சத் தொடங்கிவிட்டன. இந்த உணவகங்களையும் மக்கள் தேடிப்பிடித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.
சுவை நன்றாக இருக்கும்பட்சத்தில் மக்கள் நிச்சயம் விரும்புவார்கள்தானே! அந்த வகையில் முகப்பேர் ஜே.ஜே நகரில் வெரைட்டி சென்டருக்கு அருகே இயங்கும் ‘டான் ஸ்கூட்டர் பார்பிக்யூ’ என்ற பெயரில் இயங்கும் ஸ்கூட்டர் உணவகம் தற்போது பிரபலமாகி வருகிறது. தனது ஸ்கூட்டரையே உணவகமாக மாற்றி ஈவ்னிங் ஃபுட் கொடுத்து வரும் விக்னேஷைச் சந்தித்தோம்.“ஆட்டோமொபைல்ஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் இரண்டிலுமே சிறுவயதில் இருந்தே ஆசை. இந்த இரண்டையும் சேர்த்த மாதிரி ஒரு தொழில் செய்யலாமென யோசனை வந்தது. பல இடங்களில் ஃபுட் ட்ரக் வைத்து உணவகங்கள் தொடங்கியிருப்பார்கள்.
சென்னையின் முக்கிய பகுதிகளில், பீச் சாலைகளில் ஃபுட் ட்ரக் உணவகங்களைப் பார்த்திருப்போம். அந்த மாதிரி உணவகம் தொடங்கலாமென முடிவெடுத்தேன். அதன் ஆரம்பக்கட்டம்தான் இந்த ஸ்கூட்டர் பார்பிக்யூ. உணவுகளின் மேல் இருக்கிற ஆர்வத்தால் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தேன். பிறகு, சில ஸ்டார் உணவகங்களிலும் வேலை பார்த்தேன். அதனால் உணவகம் நடத்துவது பற்றிய அனுபவம் நிறையவே இருக்கிறது. அதனால் வீட்டுக்கு வெளியே ஒரு உணவகம் தொடங்கலாமென முடிவெடுத்து பழைய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி மாடர்னாகவும், ட்ரென்டாகவும் இந்த பார்பிக்யூ கடையை நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் பார்பிக்யூ மட்டும்தான் கொடுத்து வந்தேன். ஆனால், இப்போது ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், சிக்கன் கிரேவி, சிக்கன் டிக்கா, பார்பிக்யூ என பல வெரைட்டிகள் கொடுத்து வருகிறேன்.
எனது கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் வெரைட்டி உணவுகளை விரும்புகிறவர்கள். அவர்களால்தான் ஆரம்பத்தில் பார்பிக்யூ மட்டும் கொடுத்து வந்த நான் இப்போது பல வெரைட்டிகளைத் தருகிறேன். அதுமட்டுமில்லை, எனது கடையில் கிடைக்கும் பல உணவுகளை வாடிக்கையாளர்கள்தான் கொண்டுவர வைத்தார்கள். எங்கள் கடையில் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு இந்த மசாலாவில் இந்த உணவு நன்றாக இருக்குமென சொல்வார்கள். அடுத்த நாள் அவர்கள் விரும்பியபடியே, அவர்கள் கேட்ட புது வகையான உணவு தயாராக இருக்கும். இப்படித்தான் எனது ஸ்கூட்டர் பார்பிக்யூவில் ரெசிபிகள் அதிகமாக வந்தன. என்னதான் சைனீஸ் உணவுகள் கொடுத்தாலும் கூட அதற்கு தேவையான மசாலாக்களை நாங்கள் வீட்டில்தான் தயாரிக்கிறோம்.
அதேபோல, சென்னையில் எங்குமே கிடைக்காத சிக்கன் செட்டிநாடு ரைஸ் கொடுக்கிறோம். அதாவது சைனீஸ் ப்ரைட் ரைஸை நமது ஊர் ஸ்டைலில் கொடுக்கிறோம். இது எங்கள் உணவகத்தின் ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று. நமது கடையில் கிடைக்கும் உணவுகளில் அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் என்றால், அது மலாய் டிக்காதான். ஹரியாலி டிக்காவும் அதற்கு இணையாக வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகிறது. அதேபோல, சிக்கன் கிரேவிகளில் கார்லிக் கிரேவி, சில்லி சிக்கன் கிரேவி, சிக்கன் செட்டிநாடு கிரேவி என பல கிரேவிகள் இருக்கு. வீடுகளில் சப்பாத்தி செய்துவிட்டு இங்கு வந்து கிரேவி வாங்கி, வீடுகளுக்கு எடுத்துச்சென்று சாப்பிடுவார்கள்.
அந்தளவிற்கு நமது கடையில் கிடைக்கும் கிரேவிகள் ஸ்பெஷல். ஃபிஷ் பார்பிக்யூவும் நமது கடையில் இருக்கிறது. இங்கு சாப்பிட வருபவர்கள் கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல் எல்லா வயதுடையவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு பிடித்த உணவை இந்த மாதிரி ஸ்கூட்டர் ரெஸ்டாரென்டில் இருந்து நேரடியாக சமைப்பதைப் பார்த்து சாப்பிட்டு மகிழ்கிறார்கள். அதேபோல, பெரும்பாலான இடங்களில் சமையல் செய்யும் இடத்தைப் பார்க்கமுடியாது. ஆனால், நமது கடையில் திறந்தவெளி சமையல் என்பதால் உணவின் தரத்தை அவர்களால் நேரடியாக பார்க்க முடிகிறது.
அவர்கள் சாப்பிடும் உணவுகளை அவர்களே தேர்ந்தெடுத்து தீயில் சுட்டுக் கொடுக்கும் பார்பிக்யூக்களை அவர்களே நேரடியாக ரசித்துப் பார்க்கிறார்கள். அதுமட்டுமில்லை, இங்கு விலையுமே குறைவாக இருப்பதால் நண்பர்களோடு மொத்தமாக வந்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு ப்ளேட் டிக்கா, ஒரு ப்ளேட் பார்பிக்யூ ரூ.130தான் என்பதால் அனைவராலும் சாப்பிட முடிகிறது. பெரிய உணவகங்களில் ஐநூறு ரூபாய் கொடுத்து சாப்பிடும் உணவுகளை நமது கடையில் 200 ரூபாய்க்கு சாப்பிட முடிகிறது. தொடர் வாடிக்கையாளர்கள் நிறைய வருவதால் கடையை இன்னும் கொஞ்சம் பெரிதாக தொடங்கலாமென நினைத்திருக்கிறோம்’’ என்ற திட்டமிடலோடு பேசுகிறார் விக்னேஷ்.
– ச.விவேக்