இன்றைய தேதியில் அதிக செலவில்லாமல் இருமடங்கு லாபத்தைப் பெற விரும்பும் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் நல்ல சாய்ஸ். குறைவான தண்ணீர், குறைவான கூலி ஆட்கள், குறைவான நோய் பிரச்சினை, எளிதான விற்பனை வாய்ப்புகள், அதிக விளைச்சல், அதிக வருமானம் ஆகியவைதான் விவசாயிகள் விரும்பும் அம்சங்களாக இருக்கும். இவை யாவும் மக்காச்சோள சாகுபடியில் சாத்தியம். இத்தகைய ப்ளஸ் பாயிண்டுகள் நிறைந்த மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், வேளாண்மைத்துறையும் இணைந்து மாற்றுப்பயிர் திட்டத்தில் மக்காச்சோளத்தைப் பரிந்துரைக்கிறது. மக்காச்சோளம் தமிழகம் முழுவதும் விளைந்தாலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் அதிக விவசாயிகளால் தொடர்ச்சியாக பயிரிடப்பட்டு வருகிறது. இதில் மக்காச்சோள சாகுபடியில் மகத்தான முறையில் செயல்பட்டு வரும் சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த தாவரவியல் பட்டதாரியான மகேந்திரனைச் சந்தித்தோம்.
“ தாவரவியலில் பட்டம் பெற்றிருக்கிறேன். விவசாயம் இல்லை என்றால் மனித இனம் இல்லை என்பதை உணர்ந்தவன் என்ற அடிப்படையில், அரசு வேலைக்கு முயற்சிக்காமல் பட்டப்படிப்பு முடித்தவுடனே விவசாயத்தில் முழுமையாக இறங்கிவிட்டேன். கடந்த 2003ல் இருந்துதான் நான் முறையாக விவசாயம் செய்து வருகிறேன். மற்ற பயிர்களைக் காட்டிலும் மக்காச்சோளத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இதற்கு பருவ காலம் என்ற வரையறை இல்லை. எந்த மாதத்திலும் பயிரிடலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொட்டியம் ஏரிக்கரையோரம் எங்களுக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. வண்டல் மண் என்பதால் எங்கள் நிலம் மக்காச்சோள சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதனால் பயிர் நன்றாக வளர்ந்து விளைச்சலும் சிறப்பாக இருக்கிறது’’ என மக்காச்சோள அறுவடைப் பணிகளுக்கு இடையே நம்மிடம் பேச ஆரம்பித்தவரிடம், அதன் சாகுபடி முறைகள் குறித்து கேட்டோம்.
“ மக்காச்சோளத்தைப் பொருத்த வரையில் மானாவாரியில் புரட்டாசி பட்டத்திலும், இைறவையில் ஆடி மற்றும் தைப்பட்டத்திலும் விதைக்கலாம். வீரிய ஒட்டு ரகங்களான கோ.எச்.1, கோ.எச்.(எம்) 4, கோ.எச்.(எம்) 5, கோ.எச் 6 போன்ற ரகங்களை இந்தப் பகுதி விவசாயிகள் விரும்பிப் பயிரிடுகிறார்கள். ரகத்தைப் பொருத்து ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 கிலோ வரை விதை தேவைப்படும். விதைநேர்த்தி செய்து விதைத்தால் பலன் சிறப்பாக இருக்கும். விதைகளை விதைப்பதற்கு முன்பு நிலத்தை டிராக்டர் மூலம்சட்டிக் கலப்பையால் ஒருமுறை உழவுசெய்து, தொழுஉரத்தை நிலத்தில் பரப்பி மீண்டும் கொக்கிக் கலப்பை கொண்டு இருமுறை உழவு செய்ய வேண்டும். பின்னர் 60 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.
பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்க வேண்டும். பார் அமைப்பு தேவையில்லை என்றால் 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவில் நீர்வசதிக்கு ஏற்ப பாத்திகள் அமைக்கலாம். விதைத்ததில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு களை முளைக்கும் முன்பாக வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் 500 கிராம் அட்ரசின் தூளை ஹெக்டேருக்கு 300 லிட்டர் நீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் தெளிக்க வேண்டும். அதைப்போல பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை செய்து பயிர் நட்ட நாளில் இருந்து 85 முதல் 115 நாட்களில் அறுவடை செய்யலாம். அறுவடையைப் பொருத்தவரையில் ஒரு ஏக்கருக்கு நல்ல விளைச்சலாக இருந்தால் 30 மூட்டை மகசூல் கிடைக்கும். இப்போது மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு மூட்டை ரூ.2500 வரை விற்கிறது. அப்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை வருமானம் கிடைக்கிறது. இதில் ஏக்கருக்கு ரூ.20,000 செலவு போக ரூ.55,000 லாபம் கிடைக்கிறது. ஒவ்வொரு சாகுபடியின்போதும் லாபம் உறுதியாக கிடைப்பதால் என்னைப் போன்ற பலர் இைறவை மற்றும் மானாவாரியில் மக்காச்சோளத்தை விரும்பி சாகுபடி செய்கிறார்கள்.
கடந்த 2018ம் ஆண்டை மக்காச்சோளத்தின் இருண்ட காலம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பெரிய அளவில் இருந்தது. இதைத் தடுக்க அரசு விவசாயிகளுக்கு மானிய விலையிலும், இலவசமாகவும் மருந்துகளைக் கொடுத்து படைப்புழு அழிப்பில் முக்கிய பங்கு வகித்தது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது மக்காச்சோள சாகுபடி
விவசாயிகளிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது’’என்கிறார்.
தொடர்புக்கு:
மகேந்திரன் – 82204 03056.