ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே பாமக நிர்வாகியின் உறவினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (42). இவர் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் கல்லூரியிலும், மகள் பிளஸ்2 படிக்கின்றனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று மாலை பணி முடிந்து கம்பெனியில் இருந்து பைக்கில் வீடு திரும்பினார். பாணாவரத்தில் உள்ள செங்கல்சூளை பகுதியை கடந்தபோது அங்கு மறைந்திருந்த மர்மகும்பல் திடீரென பைக்கை மறித்து எட்டி உதைத்து பாலகிருஷ்ணனை பள்ளத்தில் தள்ளியது. பின்னர் அவர் சுதாரிப்பதற்குள் அரிவாளால் பாலகிருஷ்ணனை சரமாரி வெட்டியுள்ளது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து பாணாவரம் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சடலத்தை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டிஎஸ்பி ஜாபர்சாதிக் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக அமைப்பு செயலாளரான அ.மா.கிருஷ்ணனின் சித்தப்பா மகன் என தெரியவந்தது. பாலகிருஷ்ணனை கொன்றது யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தகவலறிந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் பாணாவரம் போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன் சோளிங்கர் அருகே பாமக நிர்வாகியான வக்கீல் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது பாமக நிர்வாகியின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.