கலிபோர்னியா: அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) டி20 3வது சீசன் தொடர் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி நேற்று நடந்த போட்டியில், வாஷிங்டன் ஃப்ரீடம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வாஷிங்டன் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் நிலைத்து நின்று ஆடி ரன் வேட்டையாடினார். அவர், 49 பந்துகளை மட்டும் சந்தித்து, 13 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 106 ரன் குவித்தார். அதனால், 20 ஓவர் முடிவில், வாஷிங்டன், 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. பின், 209 ரன் வெற்றி இலக்குடன் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி களமிறங்கியது. வாஷிங்டன் அணி பந்து வீச்சாளர்களை சந்திக்க முடியாமல், லாஸ் ஏஞ்சல்ஸ் வீரர்கள் சீட்டுக் கட்டாய் சரிந்தனர். 16.3 ஓவரில், வாஷிங்டன் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 113 ரன் வித்தியாசத்தில் வாஷிங்டன் அசத்தல் வெற்றி பெற்றது.
* சதங்களில் சாதனை: மேக்ஸ்வெல் அபாரம்
லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு எதிராக வாஷிங்டன் அணி கேப்டன் மேக்ஸ்வெல் அடித்த சதம், டி20 போட்டிகளில் அவரது 8வது சதம். இதன் மூலம், டி20 போட்டிகளில் 4வது அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை, டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர் ஆகியோருடன் மேக்ஸ்வெல் பகிர்ந்து கொள்கிறார். இந்த சாதனைப் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 22 சதங்களுடன் (463 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அஸாம் 11 சதங்களுடன் 2வது இடத்திலும், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 9 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.