ஒக்லாந்து: மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெக்சாஸ் அணி, சியாட்டல் அணியை 60 ரன்னில் அடக்கி அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) போட்டியின் 7வது லீக் ஆட்டம் ஒக்லாந்து நகரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் – சியாட்டல் அர்கஸ் அணிகள் மோதின.
சியாட்டல் முதலில் பந்து வீச, டெக்சாஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய் தேஜா முக்கம்லா 30 (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் 28 (12பந்து, 4சிக்சர்) ரன் எடுத்தனர். சியாட்டல் அணியின் ஜஸ்தீப் சிங், ஹர்மீத் சிங் தலா 2விக்கெட் எடுத்தனர்.
அதனையடுத்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டல் களம் கண்டது. அந்த அணியின் டேவிட் வார்னர், கேப்டன் ஹென்றி கிளாசன், கேல் மேயர்ஸ், சிக்கந்தர் ராஜா என முன்னணி வீரர்கள் வேகமாக விக்கெட்டை அடுத்தடுத்து பறி கொடுத்தனர். அதனால் அந்த அணி 13.5 ஓவரில் 60ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
எனவே டெக்சாஸ் அணி 93 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நடப்புத் தொடரில் அந்த அணி பெறும் 3வது ஹாட்ரிக் வெற்றி இது. சியாட்டல் அணி இதுவரை தான் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்து உள்ளது. இந்த ஆட்டத்தில் 3 ஓவர் வீசி 16 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் அள்ளிய ஜியா உல் ஹக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.