கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு நல்ல வருமானம் பார்த்து வரும் மகேந்திரன் என்பவரின் சாகுபடி அனுபவம் குறித்து கடந்த இதழில் கண்டோம். அவரைப் பேட்டி கண்டபோது மக்காச்சோளத்தின் பயன்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். அதை இந்த இதழில் காண்போம். “தாவரவியலைப் பாடமாக படித்தவன் என்பதால் மக்காச்சோளம் குறித்த அறிஞர்கள், அறிவியலாளர்களின்கருத்துகளை நன்கு தெரிந்து வைத்திருக்கிறேன். மக்காச்சோளம் பொதுவாக மனிதர்களுக்கு உணவாக பயன்படுவதுடன், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. பொரி மக்காச்சோளம், சிறு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம் என மக்காச்சோளத்தில் சில வகைகள் உள்ளன. சோளத்தில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் ஏ வைட்டமின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் கண் பார்வைக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் பயன் கிடைக்கிறது. மக்காச்சோளத்தில் உள்ள மக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்தவும், இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை இயல்பாக பராமரிக்கவும் உதவுகிறது.
இன்றைய தேதியில் பொரி மக்காச்சோளத்தில் பாப்கார்ன் தயாரிக்கும் தொழில் சிறந்த தொழிலாக விளங்குகிறது. பெருநகரங்களின் சாதாரண ஓட்டல் தொடங்கி சினிமா தியேட்டர், மால் பாப் கார்னுக்கு வரவேற்பு இருக்கிறது. அது மட்டுமின்றி கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தை மற்றும் திருவிழாக் கூட்டங்களிலும் பாப் கார்னுக்கென்று தனி வியாபாரம் இருக்கிறது. இதன்மூலம் மக்காச்சோளம் பயிரிடப்படும் என்னைப் போன்ற விவசாயிகள் பயன் பெறுவதுடன், வியாபாரிகளும் பயன்பெறுகிறார்கள். சிறு மக்காச்சோளத்தின் பிஞ்சுகள் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கதிர்கள் காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற காய்கறிகளுக்கு இணையான சத்து கொண்டவை. இந்த பேபி கார்ன் மக்காச்சோளத்தைப் பதப்படுத்தி, டின்களில் அடைத்து அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்தியாவின் நட்சத்திர உணவகங்களில் பல வகையான உணவுகள் தயாரிக்கவும் மக்காச்சோளம் பயன்படுகிறது. இது மனித உணவில் சரிவிகித சத்தைத் தருகிறது. பிஞ்சுக் கதிர்களை அறுவடை செய்த பிறகு செடியின் அனைத்து பாகங்களும் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பிஸ்கட், எத்தனால் உற்பத்தியிலும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் மக்காச்சோள உற்பத்தியில் 60 – 70 சதவீதம் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. மீதி உள்ள 30 – 40 சதவீதம் மனித நுகர்வுக்கான பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. கோதுமை, அரிசி உற்பத்திக்கு அடுத்தபடியாக உணவு உற்பத்தியில் மக்காச்சோளம் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமீப காலமாக மக்காச்சோள எத்தனால் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதனால் மக்காச்சோளத்தின் சந்தை விலைஏற்றம் கண்டு வருகிறது. மக்காச்சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச்சத்து போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துகள் அடங்கி உள்ளன’’ என மகேந்திரன் கூறும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
தொடர்புக்கு:
மகேந்திரன் – 82204 03056.
நெல் சாகுபடியைத் தவிர மற்ற பயிர் சாகுபடிகளில் கூடுதல் வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விதமான ஊடுபயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். அதைப்போல நீண்ட நாள் பயிரான மக்காச்சோளத்துடன் தட்டைப்பயறு அல்லது உளுந்தைப் பயிரிட்டு கூடுதல் வருமானம் பார்க்கலாம். கரிசல் மண்ணாக இருந்தால் துவரை, சோயா மொச்சை போன்றவற்றையும் ஊடுபயிராக செய்து பலன் பெறலாம்.