*பொதுமக்கள் கடும் அவதி
திருமயம் : திருமயம் அருகே ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட நிலையில் பணிகள் முடிய தாமதமானதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெனா விலக்கிலிருந்து செங்கீரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருச்சி- ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாதையை கடந்து செல்லும் நிலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் செங்கீரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை லெனா விலக்கு ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து பணிகள் நடைபெற்றது.
மேலும் சம்பந்தப்பட்ட சாலையை பயன்படுத்துவோர் மாற்று சாலையை பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் பராமரிப்பு பணி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 6.30 மணிவரை பணிகள் முடியவில்லை. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பியோர் அவதியடைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு லேணா விலக்கு ரயில்வே கேட் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.