Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முக்கியத் தொகுதிகளை பறிக்க திட்டம் போட்டிருக்கும் மலராத கட்சி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மலராத கட்சிக்குள் மோதல் வலுத்துட்டே இருக்காமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘மன்னர் மாவட்டத்தில் ஒன்றியத்தில் ஆளும் கட்சியில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். சில இடங்களில் மாற்ற வேண்டும் என்று மாவட்ட தலைவருக்கும், ஒன்றிய தலைவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இது சம்பந்தமாக ஒரு சில ஆடியோவும் வைரலாகி வருகிறது. ஆனால் தொடர்ந்து சண்டைகள் நடந்து வருவதாக கட்சியினர் பேசி வருகின்றனர். இதனால் இரு தரப்பும் தனித்தனியாக தங்களின் புகார் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புதிய மாவட்ட தலைவர் நியமனத்திற்கு பிறகு கட்சியில் பனிப்போர் நிலவி வருகிறது. கட்சியில் உள்ள நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று தலைமைக்கு மனு அனுப்பியுள்ளனர். மனு குறித்து விசாரணை முடிவில் எந்தவிதமான நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனி கூட்டம் போட்டு தேசிய தலைமையை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பல்கலைக்கழகத்துல என்ன பிரச்னையாம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகர் பல்கலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பணி அனுபவம் வாய்ந்த ஒருவர் தேர்வுத்துறைக்கான தலைமையில் இருக்கிறார். இவர் பதவி ஏற்ற பின்னர் வெளிப்படையான கூட்டு நிர்வாகத்தால் தேர்வுத்துறை மீது மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் நல்ல பெயர் கிடைப்பதோடு. கடந்த காலங்களில் தேர்வுத் துறையின் செயல்பாட்டால் அவதியுற்ற பலரும் இப்போது திருப்தியடைந்துள்ளனர். ஆனால் பல ஆண்டுகளாக தேர்வுத்துறை மூலம் பல கோடிகளை சுருட்டிய சிலரும், அதனால் பலனடைந்த பலரும் தற்போது இதுபோன்ற நிர்வாகத்தை தொடர அனுமதித்தால் அதுவே இனிமேல் நடைமுறையாக்கப்பட்டு விடும் என ஏதேதோ காரணத்தை தூக்கி கொண்டு தேர்வுத்துறையை செயல்பட விடாமல் முடக்குவதோடு, மாநில அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்களாம். இந்த பிரச்னையை உருவாக்கி பின்புலத்தில் இருந்தபடி வழிநடத்துவதில் தாமரைக் கட்சியின் ஹனிபீ மாவட்டத்தின் பெருமாள் பெயர் கொண்டவரின் பங்கு முக்கியமானது என்கிறார்கள். இந்த பெருமாள்தான் ஏற்கனவே பல்கலைக்கான தனியார் மையம் எடுத்து நடத்தியதில் பெரும் லாபம் பார்த்தவர் என்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில் தாமரையை காலி செய்ய பலர் களத்தில் குதிச்சிருக்காங்களாமே.. உண்மைதானா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் தாமரை கட்சியுடன் கூட்டணி வைக்க கூடாது என புல்லட்சாமி மனநிலை இருந்தாலும், மத்திய ஏஜென்சிகளை வைத்து மறைமுகமாக மிரட்டுகிறார்களாம். தாமரையுடன்தான் தேர்தலை சந்தித்தாக வேண்டும் என பாஜ தலைமை அழுத்தமாக கூறிவிட்டதாம். வேறு வழியில்லாத சாமி, தற்போது அடங்கிவிட்டாராம். இந்த தேர்தலில் என். ஆர் காங்கிரஸ் கட்சியை கபளீகரம் செய்து, தங்களை எப்படியாவது முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என திட்டம் போட்டு தாமரை கட்சி காய் நகர்த்தி வருகிறதாம். இதனை அறிந்து கொண்ட சாமியும், தன் பங்குக்கு தனது ஆட்களை வெவ்வேறு குழு, குழுவாக தேர்தலை சந்திக்க ஆணையிட்டுள்ளாராம்.

தேர்தலுக்கு பிறகு ஒன்றிணைவோம் என்ற கருத்துடன் தேர்தல் வேலையை இப்போதே துவங்கி விட்டார்களாம். உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ தலைமையில் ஒரு குழுவும், ஏனாம் மாஜி அமைச்சர் தலைமையில் குழுவும் சாமிக்கு ஆதரவாகவும், தாமரைக்கு எதிராக களமிறங்க இருக்கிறார்களாம். அதேபோல் பாஜ தரப்பில் லாட்டரி அதிபர் மகனை தலைமையாக கொண்டு மற்றொரு குழுவும் களமிறங்குகிறதாம். புதுச்சேரியில் இந்த முறை தாமரையை காலி செய்ய பல்வேறு தரப்பினரும் களத்தில் குதிக்க இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முக்கிய தொகுதிகள்ல கைவைக்குது போல தாமரை கட்சி..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ள மலராத கட்சி 2026ல் தமிழ்நாட்டுல எங்கள் கட்சி தான் ஆட்சி அமைக்கும்னு சொன்னது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கு. முதலில் கூட்டணி, அப்புறம் கூட்டணி ஆட்சி, இப்ப மலராத கட்சி தான் ஆட்சி அமைக்கும்னு குண்டை தூக்கி போட்டுள்ளார்கள். இதற்கு வசதியாக இலைக்கட்சியிடமிருந்து கணிசமான தொகுதிகளை கேட்டு வாங்க திட்டம் போட்டு இருக்கிறார்களாம். குறிப்பாக கடந்த பார்லிமெண்ட் எலக்சனில் எந்தெந்த சட்டமன்ற தொகுதியில் கூடுதல் ஓட்டு கிடைத்ததோ அதை எல்லாம் இலைக்கட்சியிடமிருந்து பறிக்க முடிவு செய்துள்ளார்களாம். இந்த பார்முலா படி மான்செஸ்டர் மாவட்டத்துல 3 சீட் கேட்க முடிவு செய்துள்ளதாம் மலராத கட்சி. இதில் ஒரு சீட் மலராத கட்சியோட சிட்டிங் எம்எல்ஏ என்பதால் பிரச்னை எதுவும் இல்லையாம். மீதி இருக்கிற 2 சீட் இலைகட்சியோட சிட்டிங் சீட்டாம். இந்த 2 சீட்டுகளையும் இலைக்கட்சியிடமிருந்து எப்படியாவது பறித்தே தீரனும்னு மலராத கட்சி இப்ப இருந்தே நெருக்கடி கொடுத்திட்டு வருகிறதாம்.

இலைக்கட்சியில் இருந்து பறிக்கிற 2 சீட்டில் கவுண்டம்பாளையம் தொகுதியில் மலராத கட்சியோடு மாஜி மாநில தலைவரும், கிணத்துகடவு தொகுதியில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மாஜி மாவட்ட தலைவரும் போட்டியிட முடிவு செய்துள்ளார்களாம். இதோடு சிங்காநல்லூர் தொகுதியையும் கைப்பற்ற மாஜி மாநில தலைவரோட நெருக்கமா இருக்கிற நில மோசடி வழக்கில் சிக்கிய மாஜி மாவட்ட தலைவரும் மல்லுகட்டி வருகிறாராம். ஏற்கனவே மலராத கட்சியோட வலுக்கட்டாயமா கூட்டணி வைத்ததை கட்சியின் 2ம் கட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்காத நிலையில் இப்ப சிட்டிங் தொகுதிகளையும் இழக்க வேண்டி இருப்பதால் இலைகட்சி தொண்டர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். இதனோட பாதிப்பு நிச்சயம் எலக்சனில் எதிரொலிக்கும்னு பேசிக்கிறாராங்க. மான்செஸ்டரில் பறிபோகும் 2 தொகுதியில் ஒரு தொகுதி மாஜி அமைச்சர் பெல்லின் நிழலாக இருந்து செயல்பட்டு வருபவருடைய தொகுதியாம். மலராத கட்சியோட கூட்டணி வைக்க பாடுபட்ட பெல் தரப்பும் இப்ப அச்செட்டில் இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.