சென்னை: தாதா மயிலை சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஏ பிரிவு ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கல்லறை தோட்டத்தில் ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்றபோது போலீசாரை பீர் பாட்டிலால் கிழித்துவிட்டு தப்பிக்க முயன்றதால் போலீசார் சுட்டுப் பிடித்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
காவல்நிலைய எல்லைகளில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ளவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள ரவுடிகளை தினமும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் குறித்த ரகசிய தகவல்களை சேகரிக்க வேண்டும். தொடர்ந்து தவறான நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஒரு மாதமாக 400க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக உள்ள ரவுடிகள் தற்போது போலீசாரின் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது ெசய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, போலீசார் ரவுடிகளை 4 கேட்டகிரியாக பிரித்து அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சில ரவுடிகள் காவல் நிலையங்களில் போலி முகவரி கொடுத்துவிட்டு தற்போது தலைமறைவாக உள்ளனர்.
எனவே தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை ‘பறந்து’ செயலி உதவியுடன் இருப்பிடத்தை கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரோகித் (எ) ரோகித் ராஜ் (34). தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். டி.பி.சத்திரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது, பிரபல தென்சென்னை தாதா மயிலை சிவக்குமார், பிரபல ரவுடி தீச்சட்டி முருகன், டி.பி.சத்திரம் ஆறுமுகம் உள்பட 3 முக்கிய கொலை வழக்குகள் உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதேநேரம் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் வழக்குகளும் ரவுடி ரோகித் ராஜ் மீது உள்ளது. ஏ கேட்டகிரி ரவுடியான இவர் மீது, நிலுவையில் உள்ள 3 கொலை வழக்குகளில் நீதிமன்றம் பிணை ஆணை பிறப்பித்தும் ஆஜராகாமல் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தபடியே ஆதரவாளர்கள் மூலம் மாமூல் மற்றும் கட்டப்பஞ்சாத்துகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ரவுடி ரோகித் ராஜ் கீழ்ப்பாக்கம் பழைய கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக டி.பி.சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று அதிகாலை 4.15 மணிக்கு உதவி ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் தலைமை காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகியோர் கல்லறை தோட்டத்திற்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கல்லறை ஒன்றின் அருகே பதுங்கி இருந்த ரவுடி ரோகித் ராஜ் திடீரென, ‘என்னையா பிடிக்க வந்தீர்கள்… உயிர் மீது ஆசை இருந்தால் ஓடிவிடுங்கள்….’என்று கூறி போலீசாரை எச்சரித்துள்ளான். அப்போது உதவி ஆய்வாளர் கலைச்செல்வி நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்.
எங்களிடம் சரண்டர் ஆகிவிடு என்று கேட்டுள்ளார். அதற்கு தான் சரண்டராவதாக கூறினார். உடனே தலைமை காவலர்களான சரவணக்குமார் மற்றும் பிரதீப் ஆகியோர் கைது ெசய்ய ரவுடி அருகே நெருங்கிய போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், கல்லறை அருகே வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமை காவலர் சரவணக்குமார் மற்றும் பிரதீப் ஆகியோரை தாக்கியுள்ளார். அதில் சரவணகுமாருக்கு நரம்பு துண்டித்து ரத்தம் கொட்டியது. பிரதீப் லேசான காயங்களுடன் தப்பினார். உடனே ரவுடி ரோகித் ராஜ் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
இதை கண்ட உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தற்பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ரோகித் ராஜ் காலை நோக்கி சுட்டார். இதில் வலது கால் முட்டியில் குண்டு பாய்ந்து ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார். அப்போது காயமடைந்த தலைமை காவலர் மற்றும் ரவுடியை மீட்டு கிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எஸ்.ஐ. கலைச்செல்வி சேர்த்தார். அங்கு ரவுடி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், ரவுடி தாக்கியதில் காயமடைந்த தலைமை காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர், துணை கமிஷனர் ரகுபதி, உதவி கமிஷனர் துரை ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 காவலர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ரவுடியை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் ரவுடிகளிடையை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
* எஸ்.ஐ. கலைச்செல்விக்கு கமிஷனர் அருண் பாராட்டு
டி.பி.சத்திரம் சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ரவுடி ரோகித் ராஜ் பல மாதங்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான தனிப்படையினர் திறமையாக செயல்பட்டு ரவுடி ரோகித் ராஜை நேற்று அதிகாலை கைது செய்தனர். ரவுடி தலைமை காவலர்கள் 2 பேரை பீர்பாட்டிலை உடைத்து தாக்கிய போது, விரைவாக செயல்பட்டு ரவுடியை தற்பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தார்.
இதையடுத்து, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண், துணிச்சலாக செயல்பட்டு ரவுடியை கைது செய்த உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை நேற்று காலை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் உடனிருந்தார்.