* சிறப்பு செய்தி
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தற்பொழுது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு நிதிநிலையிலும் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை வழங்கும் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்துக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி மற்றும் இந்த வேலை வாய்ப்பின் மூலம் பொது சொத்துக்களை உருவாக்குதல் என்ற அடிப்படையில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஓராண்டில் 100 நாட்கள் என்ற அடிப்படையில் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மத்திய அரசு 75% மற்றும் மாநில அரசு 25% என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.283 ஊதியமாக வழங்க வேண்டும். எனினும், ரூ.210 முதல் 230 வரை மட்டுமே ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் கிராமங்களில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாருதல், புதிய பண்ணைக் குட்டைகளை அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு ரூ.7 முதல் ரூ. 26 வரை உயர்த்தியது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 80% பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளது. இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 33 சதவீதம் அளவில் குறைத்த போதிலும் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.6,366 கோடி சம்பளத் தொகையை பாக்கி வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியால் கொண்டு வந்த இந்த திட்டத்தின் மூலம், 14.42 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த திட்டத்தில், பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர். கொரோனா தொற்றின்போது வேலைவாய்ப்பு இல்லாதபோது, இந்த திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைக்கொடுத்தது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் இருந்தபோது, கோடிக்கணக்கான மக்களை இது பாதுகாத்தது. இந்த திட்டத்தில் 14 கோடிக்கும் மேல் பணியாளர்கள் வேலை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.6,366 கோடி தொகையை ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அதனை கண்காணிக்க மாவட்டங்கள் தோறும் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வாங்கப்படும் இழப்பீடு, பணியிட வசதிகள் உள்ளிட்ட குறைதீர்ப்பு அலுவலரிடம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை கண்காணிக்கவும், குளறுபடிகளை சரி செய்ய கட்டாய களஆய்வு செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 46.21 லட்சம் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 93% பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில் : 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வளர்ச்சி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினசரி பணிக்கு வருவோர் குறித்து காலை மற்றும் மதியம் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 46.21 லட்சம் பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 43.13 லட்சம் பணிகள் அதாவது 93% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது என்றாலும், எடுக்கப்பட்ட பணிகளில் 93% பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3.07 லட்சம் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அதேபோல் 2023-24ம் நிதியாண்டில் தற்போது வரை மட்டும் மொத்தம் 1.32 லட்சம் பணிகள் எடுத்த கொள்ளப்பட்டுள்ளது. அதில் 0.50 லட்சம் பணிகள் அதாவது 38% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 62 சதவீதமான 0.81 லட்சம் பணிகள் நிலுவையில் உள்ளது. மேலும் திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் குறைந்த சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* ஊரக வேலை உறுதித்திட்டம் பணிகள் விவரங்கள்
2023-24ம் வரை எடுக்கப்பட்ட பணிகள்
மொத்தம் முடிக்கப்பட்டவை சதவீதம் நிலுவை உள்ளவை சதவீதம்
46.21 லட்சம் 43.13 லட்சம் 93% 3.07 லட்சம் 7%
2023ம் ஆண்டு தற்போது வரை எடுக்கப்பட்ட பணிகள் விவரங்கள்
மொத்தம் முடிக்கப்பட்டவை சதவீதம் நிலுவை உள்ளவை சதவீதம்
1.32 லட்சம் 0.50 லட்சம் 38% 0.81 லட்சம் 62%
* குறைந்த சதவீத
பணிகள் முடிக்கப்பட்ட மாவட்டங்கள்
மாவட்டங்கள் சதவீதம்
திருப்பத்தூர் 15%
தென்காசி 21%
திருநெல்வேலி 21%
ராணிப்பேட்டை 21%
தருமபுரி 24%
* மாவட்ட வாரியாக முடிக்கப்பட்ட பணிகளின் சதவீதம்
மாவட்டங்கள் சதவீதம்
கன்னியாகுமரி, விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் 24% – 30%
தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் 31% – 36%
திண்டுக்கல், தஞ்சாவூர், கரூர், நாமக்கல், சேலம், கோவை மற்றும் திருவள்ளூர் 37% – 45%
ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி,
திருப்பூர், திருவண்ணாமலை 46% – 65%
* பணியாளர்களை கண்காணிக்க திட்டம்
100 நாள் ஊரக வேலை திட்டத்தில் உள்ள பணியாளர்கள் பதிவேட்டில் வருகை குறிப்பிட்டு பணிகளை செய்வதில்லை எனவும், பணிகளுக்கு வந்தாலும் சரியாக பணிகளை முடிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அத்திட்டத்தில் பணி செய்யக்கூடிய ஆட்களை கண்காணிப்பதற்காக டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் பணிகளை கண்காணிப்பதற்கும், முடிக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்வதற்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட டிரோன்களை பயன்படுத்த ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.