சென்னை: 9 சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் மயிலாப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 9 திருக்கோயில்கள் சார்பில் இந்தாண்டு மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் கபாலீசுவரர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றவுள்ள மகாசிவராத்திரி பெருவிழாவினை 26.02.2025 இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி கடந்த 02.03.2022 அன்று மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, 2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற அறிவிப்பின்படி,
18.02.2023 அன்று மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், பேரூர், அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களிலும், 2023-2024 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற அறிவிப்பின்படி, மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களையும் சேர்த்து 7 திருக்கோயில்களில் மகாசிவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட்டது.
2024-2025 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்புகளின்படி, இந்தாண்டு திருவாரூர் மாவட்டம், அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களையும் சேர்த்து 9 திருக்கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் 26.02.2025 புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் 27.02.2025 வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மகாசிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம். பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடவும், மகாசிவராத்திரி விழாவினை கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.