மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியானார்கள். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தானே ஆகிய இடங்களில் பொதுப் போக்குவரத்துக்கு புறநகர் ரயில்கள் தான் உயிர் நாடியாகத் திகழ்கின்றன. பஸ்களை விட ரயில்களையே மக்கள் அதிகம் நம்பியிருப்பதால், புறநகர் ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக அனைத்து புறநகர் ரயில்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
ரயிலில் நிற்பதற்கு இடமின்றி வாசற்படிகளில் தொங்கியபடி ஏராளமானோர் ஆபத்தான முறையில் பயணிக்கும் அவலநிலை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை கசாராவில் இருந்து சிஎஸ்டி நோக்கி வந்த புறநகர் ரயிலானது, தானேயில் திவா- மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அருகிலுள்ள தண்டவாளத்தில் மற்றொரு புறநகர் ரயில் கசாரா நோக்கி சென்றது. வாசலில் தொங்கிக் கொண்டிருந்த 2 ரயில்களைச் சேர்ந்த பயணிகளும் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதில் சிஎஸ்டி நோக்கி வந்த ரயிலில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்தனர். கசாரா நோக்கி சென்ற ரயிலின் கார்டு ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
ஆம்புலன்ஸ்களுடன் அங்கு விரைந்த ரயில்வே போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உல்லாஸ் நகரைச் சேர்ந்த கேதன் திலீப் சரோஜ்(23), ராகுல் சந்தோஷ் குப்தா, மயூர் ஷா மற்றும் தானேவைச் சேர்ந்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் விக்கி பாபாசாகேப் முக்யாத்(34) உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இவர்களை மீட்ட ரயில்வே போலீசார் சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிலர் மேல் சிகிச்சைக்காக ஜூபிடர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இந்த விபத்தை தொடர்ந்து மும்பையில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கடந்த 20 ஆண்டுகளில் 51,000க்கும் மேற்பட்டோர் பலி
மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதை தடுக்க நடவடிக்கை கோரியும் மும்பை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் தினமும் சராசரியாக 5 பேர் உயிரிழப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போது ரயில்வே சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 20 ஆண்டுகளில் 51,802 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.