மும்பை: பாஜ- சிவசேனா ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்ட பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியிட்ட பின்னர் கடந்த 15ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் விதிமுறைகள் மீறல் சம்மந்தமாக பொதுமக்கள் புகார் அளிக்க சி-விஜில் என்னும் செயலியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6,382 புகார்கள் செயலி வழியாக பெறப்பட்டுள்ளன. இதில் 6381 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
புகார் அளிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட குழு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,வாக்காளர்களுக்கு பணம்,பரிசு பொருட்கள் போன்றவற்றை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஒரு மாதத்தில் மட்டும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.536 கோடி மதிப்பிலான பணம், மதுபானங்கள்,போதை பொருட்கள், அரிய வகை உலோகங்கள் உள்ளிட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.