அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் நந்தத் பகுதியில் சங்கரராவ் சவான் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோர் 1ம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருந்த 24 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்த 24 பேரில் 12 பேர் பச்சிளம் குழந்தைகள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் அடுத்த 24மணி நேரத்தில் மருத்துவமனையில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘அரசு மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறை மற்றும் சிகிச்சையில் அலட்சியமே நோயாளிகள் உயிரிழப்புக்கு காரணமாகும். இதேபோன்ற சம்பவம் தானே அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளுக்கு நீதித்துறையால் தகுந்த தண்டனை கொடுக்கப்படும்” என்றார்.