புதுடெல்லி: கட்சி அமைப்பை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா,அரியானா சட்ட பேரவை தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.இதில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே,‘‘ அடிமட்டத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் பொறுப்பு கூறலை கட்டாயமாக்க வேண்டும்.அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பகிரங்கமாக வெளியே பேசக்கூடாது. தேர்தல் நடந்த 4 மாநிலங்களில் இந்தியா கூட்டணி 2 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் தேர்தலில் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கிறது.
எதிர்காலம் மிகவும் சவாலாக உள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நமது பலவீனங்களை சரி செய்து கட்சி அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை களைய கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகின்றன. பூத் அளவில் இருந்து கட்சி அமைப்பை பலப்படுத்துவது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் இருந்து வாக்கு எண்ணிக்கை இரவும் பகலும் நாம் இரவும் பகலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.