மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் பாஜகவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உத்தவ் – ராஜ் தாக்கரே கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடப்பதால் காங்கிரஸ், சரத்பவார் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.கடந்த ஏப்ரல் முதல், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) மற்றும் அவரது உறவினர் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணி பற்றிய பேச்சுகள் தொடங்கின.
மராத்தி மொழி மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுவான கோரிக்கையுடன் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட திட்டம் வகுத்தன. குறிப்பாக மாநில பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட முடிவு செய்தன. ஆனால், இந்த கூட்டணி பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கியது.
கடந்த 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தோல்வியடைந்ததால், தற்போது உத்தவ் தாக்கரேவின் அரசியல் நகர்வு புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பாஜக மாநில தலைமை எடுத்துள்ள சர்வேபடி, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரின் கட்சிகள் ஓர் அணியில் சேர்ந்தால், தங்களது கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், வரவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை பெரிய அளவில் பாதிக்காது என்று தெரிவித்துள்ளது.
பாஜகவின் வலுவான வாக்கு வங்கியாக, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமை மற்றும் 2024 சட்டமன்றத் தேர்தல்களில் அவர்களின் வெற்றி ஆகியவை மாநில பாஜகவின் நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ளன. கடந்த 2022ல் சிவசேனா கட்சி பிளவு ஏற்பட்ட பிறகு, உத்தவ் தாக்கரேவின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும், ராஜ் தாக்கரேவின் கட்சி மீதான தாக்கமும் மக்களிடையே குறைந்து இருப்பதாகவும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் உத்தவ் – ராஜ் தாக்கரே கூட்டணி பாஜகவுக்கு பெரிய சிக்கலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அதேநேரம் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.