மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சரை அறிவிப்பதில் சிக்கல் நீடித்துவரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் 132 தொகுதிகளில் வென்ற பாஜக முதலமைச்சர் பதவியை கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது. 57 எம்.எல்.ஏ க்களை பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே அதற்கு ஈடாக சபாநாயகர், துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர் பதவிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக பாஜக சிவசேனா இடையே இழுபறி நீடித்துவருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நேரில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மும்பையில் இன்று பாஜக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் பாஜகவில் சட்டமன்ற தலைவராக தெவிந்திர பட்னவீஸ் முறைப்படி தேர்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பாஜக சிவசேனா இடையே இன்று இரவுக்குள் சுமூக முடிவு ஏற்படாவிட்டால் நாளை தேவேந்திர பட்னவீஸ் மட்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பின்னர் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.