புதுடெல்லி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் இறந்த சம்பவத்திற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறையின் காரணமாக புதியதாக பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களை பிரிந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒன்றிய பாஜக அரசு, தனது விளம்பரத்திற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு மருந்து வாங்க பணம் இல்லையா? பாஜகவின் பார்வையில் ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனை இறப்புகள் குறித்து பதிலளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‘மருத்துவமனையில் நடந்த இறப்பு சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.