மும்பை: பாஜ அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நடந்த பேரணியில், 20 ஆண்டுகளுக்கு பிறகு உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே கைகோர்த்து ஒரே மேடையில் தோன்றினர். மறைந்த தலைவர் பாலசாகேப் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சி இருந்த போது, உத்தவ் தாக்கரேவும் ராஜ்தாக்கரேவும் கட்சியின் இரு தூண்களாக திகழ்ந்தனர்.
சகோதரர்கள் இருவரும் இணைந்தே முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுத்தனர். ஆனால் 2005ம் ஆண்டு சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து விலகினார். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன் பிறகு சிவசேனாவை வழிநடத்தி வந்த உத்தவ் தாக்கரேவுக்கு 2022ம் ஆண்டு கட்சி பிளவுபட்ட சம்பவம் பேரிடியாக விழுந்தது.
அப்போதைய உத்தவ் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜ கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்து முதல்வரானார். எம்எல்ஏக்கள் அதிகம் பேர் ஷிண்டே வசம் இருந்ததால் சிவசேனா கட்சியும், வில்அம்பு சின்னமும் ஷிண்டே வசம் சென்றது. பாஜவின் சூழ்ச்சியால் கட்சியை பறிகொடுத்த உத்தவ் தாக்கரே, உத்தவ் சிவசேனா என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்தார். 2024 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் போட்டியிட்ட உத்தவ் கட்சி வெறும் 20 இடங்களில் மட்டும் தான் வென்றது. அதே நேரத்தில், ராஜ்தாக்கரே கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. இரு கட்சிகளுமே மோசமான பின்னடைவை சந்தித்தன. இந்த சூழலில் தான் மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு பிரச்னை வெடித்தது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என மாநில அரசு அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்னை தாக்கரே சகோதரர்கள் மீண்டும் ஒன்றிணைய வழிவகுத்தது. இந்தி திணிப்புக்கு எதிராகவும் மராத்தி மொழியை பாதுகாக்கவும் மீண்டும் இணைய உள்ளதாக தாக்கரே சகோதரர்கள் அறிவித்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக ஜூலை 5ம் தேதி (நேற்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். ஆனால் அதற்குள்ளாக, மாநில அரசு இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டதால், அந்த போராட்டம் வெற்றி கொண்டாட்டமாக மாற்றப்படுவதாக மீண்டும் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதன் படி, நேற்று ஒர்லியில் உள்ள என்எஸ்சிஐ டோம் வளாகத்தில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே முன்னிலையில் பிரமாண்டமான வெற்றிப் பேரணி நடைபெற்றது. உத்தவ் சிவசேனா மற்றும் எம்என்எஸ் கட்சியினர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், உத்தவ் தாக்கரேவும் ராஜ்தாக்கரேவும் ஒரே மேடையில் கைகோர்த்து நின்றதை பார்த்து தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
அப்போது தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் உரையாற்றிய ராஜ்தாக்கரே, பாலசாகேப் தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் கூட செய்ய முடியாதை ஒன்றை முதல்வர் பட்நவிஸ் செய்து எங்களை ஒன்றிணைத்து விட்டார் என்று பேசினார். உத்தவ் தாக்கரே பேசும்போது, ‘மராத்தி மொழியையும் மகாராஷ்டிராவையும் யாரும் சீர்குலைக்க விட மாட்டோம். நாம் ஒன்றாக இருந்தால் தான் பலத்துடன் இருக்க முடியும். மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிராவை ஒன்றாக இணைந்து கைப்பற்றுவோம்’ என்று உத்தவ் பேசியதும் இரு கட்சித் தொண்டர்களும் அரங்கம் அதிர கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
* மகாராஷ்டிராவை தொட்டுப்பார் என்ன நடக்கும் என்பது புரியும்
ராஜ்தாக்கரே பேசும் போது,’ மராத்தி மக்களின் வலுவான ஒற்றுமை காரணமாக மகாராஷ்டிரா அரசு மும்மொழி சூத்திரம் குறித்த முடிவைத் திரும்பப் பெற்றது. மகாராஷ்டிராவைத் தொட முயற்சி செய்தால், என்ன நடக்கும் என்று பாருங்கள்’ என்று அவர் எச்சரித்தார்.