கட்சிரோலி: மகாராஷ்டிரா சட்டீஸ்கர் எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மகராஷ்டிரா சட்டீஸ்கர் எல்லையில் உள்ள கவாண்டே பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 300 பேர் அடங்கிய சிறப்பு கமாண்டோ குழு, பாதுகாப்பு படையினர், சிஆர்பிஎப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் கவாண்டே பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கவாண்டே நெல்குண்டா பகுதிகளை ஒட்டிய இந்திராவதி ஆற்றங்கரையோரம் நடந்த இந்த தேடுதல் வேட்டையின்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்குசிறப்பு கமாண்டோ உள்ளிட்டோர் தகுந்த பதிலடி கொடுத்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 4 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனிடையே சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒரு நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார்.