மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களை கைப்பற்றி பா.ஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்தியா கூட்டணியால் மொத்தமாக 46 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2 வாரங்களுக்கு பின்னர், பாஜ தலைவர் பட்நவிஸ் புதிய முதல்வராக கடந்த 5ம் தேதி பதவியேற்றார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டேவும், அஜித்பவாரும் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர்.
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற 288 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்காக சட்டப்பேரவையின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சியினர் எம்எல்ஏ பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பா.ஜ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர், சட்டப்பேரவையின் முதல்நாளில் எம்எல்ஏக்களாக பதவியேற்க மறுத்துவிட்டனர்.


