மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அத்தேர்தல் முடிவுகள் செல்லாததாக அறிவிக்கக்கோரி சேட்டன் சந்திரகாந்த் ஆகிரே என்ற மனுதாரரால் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது, போலி வாக்களிப்பு அல்லது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எந்தவொரு வாக்குச் சாவடியிலும் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்கள் அல்லது மோசடிகள் பதிவாகவில்லை என்றும், தேர்தல் முடிவுகளை ரத்து செய்வதற்கான எந்தவொரு நம்பகமான அல்லது சட்டப்பூர்வ அடிப்படையையும் மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. வெறும் அரசியல் கருத்துக்கள், நடைமுறை சந்தேகங்கள் அல்லது ஊடக அறிக்கைகள் முழு ஜனநாயக செயல்முறையையும் தலைகீழாக மாற்றுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அது மேலும் கூறியது. இந்த மனு “முழுமையான விரக்தியில்” தாக்கல் செய்யப்பட்டதாகவும், எந்த உள்ளடக்கமோ தகுதியோ இல்லாததாகவும் கூறப்பட்டது.