ராய்ப்பூர்: காதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர்களை காப்பாற்ற பாஜ, அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டினார். துபாயில் வசிக்கும் சட்டீஸ்கரை சேர்ந்தவர்களான சவுரவ் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் மகாதேவ் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். மகாதேவ் செயலி உரிமையாளர்களிடம் சட்டீஸ்கர் முதல்வர் ரூ.508 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. மகாதேவ் செயலி உள்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு நேற்று முன்தினம் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பூபேஷ் பாகேல் நேற்று கூறுகையில்,‘‘ சட்டீஸ்கர் பேரவை தேர்தலில் பாஜ தோல்வியை சந்திக்க உள்ள நிலையில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை இறக்கியுள்ளனர். சூதாட்ட செயலி வழக்கில் கைது செய்யப்பட்ட அசீம் தாஸ் பாஜவுக்கு நெருக்கமானவர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனமும் பாஜ தலைவர் ஒருவருக்கு சொந்தமானது. கடந்த 2 ஆண்டுகளாக இதில் விசாரணை நடந்து வருகிறது. பிளேஸ்டோரில் இல்லாத ஒரு செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த செயலியை தடை செய்வது அவர்களது நோக்கம் அல்ல. வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற தளங்களை பயன்படுத்தி சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு முழுமையான தடை விதிக்காத வரை இதில் எதுவும் நடக்க போவது இல்லை. ஆன்லைன் சூதாட்டம் நடத்தி வருபவர்கள் லட்சக்கணக்கில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. போலி வங்கி கணக்குகளை கண்டுபிடித்து அவற்றை முடக்க வேண்டும். ரவி உப்பல், சவுரப் சந்திரகர் ஆகியோர் மகாதேவ் செயலியின் உரிமையாளர்கள் என்று சட்டீஸ்கரில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால், அவர்களை தங்களுக்கு தெரியாது என அமலாக்கத்துறை சொல்கிறது.இவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்கே பாஜவும்,அமலாக்கத்துறையும் முயற்சிக்கிறது’’ என்றார். ஒன்றிய அமைச்சர் மறுப்புமகாதேவ் செயலியை தடை விதிக்க கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன் சட்டீஸ்கர் முதல்வர் கடிதம் அனுப்பியும் அதை தடுக்க ஒன்றிய அரசு தவறி விட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மறுப்பு தெரவித்துள்ளார்.