Friday, December 1, 2023
Home » மகத்தான புண்ணியம் தரும் மஹாளயம்

மகத்தான புண்ணியம் தரும் மஹாளயம்

by Kalaivani Saravanan

30.09.2023 – மஹாளயபட்சம் ஆரம்பம் / 15.10.2023 – மஹாளயபட்சம் முடிவு

ஒவ்வொரு அமாவாசையன்றும் நாம் நம்முடைய முன்னோர்களை நினைத்து எள்ளும் நீரும் இறைத்து வணங்கி அவர்கள் ஆசிர்வாதத்தைப் பெறுகிறோம். இந்த வழிபாட்டினால் அவர்கள் திருப்தியும், மன நிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறார்கள். மனம் குளிர்ந்து அவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது. ஆதலால்தான், பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்று பெரியவர்கள் திருப்பித் திரும்பிச் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்கள் வழிபாட்டை செய்தாலும், வருடத்திற்கு 15 நாட்கள் முழுமையாக இந்த வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்கு `மகாளயபட்சம்’ என்று பெயர். இந்த மஹாளயபட்சத்தின் சிறப்பு பற்றியும், அப்பொழுது செய்ய வேண்டிய பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பற்றியும், அதன் பலன்களைப் பற்றி காண்போம்.

மகாளயம் என்றால் என்ன?

சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை எனப்படும். சூரியனை, பிதுர் காரகன் என்றும், சந்திரனை, மாதுர் காரகன் என்றும் சொல்வார்கள். ஜாதக ரீதியாக இந்த இரண்டும் பிரதானமானவை. இவர்கள் நிலையை வைத்துதான் ஒருவருடைய வாழ்க்கை நிலையைச் சொல்ல வேண்டும். சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் சொல்வார்கள். பிறந்த ஜாதகத்தை (லக்கினம்) சூரியன் நிலை தீர்மானிக்கிறது. நடக்கும் நிகழ்வுகளை சந்திரன் (ராசி) தீர்மானிக்கிறார். இவர்கள் இணையும் நாளில் (அமாவாசை) நம் முன்னோர்களை நினைக்க வேண்டும். அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் அதிமுக்கியமானவை.

1. ஆடி அமாவாசை.
2. தை அமாவாசை.
3. மஹாளய அமாவாசை.

ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் முறையே தட்சிணாயன தொடக்கத்திலும், உத்தராயண தொடக்கத்திலும் வரும் அமாவாசைகள். இந்த அமாவாசைகள் இரண்டுக்கும் நடுவே உள்ள மஹாளய அமாவாசை. முக்கியமானது. ஏதோ ஒரு காரணத்தினால் அமாவாசையை மறந்தாலும், மகாளயத்தை மறக்கவே கூடாது. அதனால்தான், “மறந்தவனுக்கு மஹாளயம்’’ என்று ஒரு பழமொழியே சொல்லியிருக்கிறார்கள்.

மஹாளயத்தின் அடிப்படை

`மஹாளயம்’ என்றால் `பெரிய கூட்டம் என்று பொருள்’. மஹாளயத்தின் சிறப்பிற்குக் காரணம் இருக்கிறது. ஆடி அமாவாசைக்கு, பித்ருக்கள் உலகத்திலிருந்து இந்த நில உலகத்திற்கு வருகின்றார்கள். பித்ருக்கள் உலகம் என்பது உடலைவிட்ட ஆன்மாக்கள் தங்களுக்கு வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். பித்ரு லோகம் எங்கே இருக்கிறது என்பது ஒரு கேள்வி? பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும் நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் 24) கூறுகிறது. மறைந்த நம் முன்னோர், மொத்தமாக நம் வீடு தேடி வரும் காலமே மஹாளயபட்சம். “பட்சம்” என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர்கள், பித்ருலோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்கள் நம்மோடு தங்குகிறார்கள்.

பித்ருக்கள் யார்?

தமிழிலக்கிய மரபு என்பது தமிழ் வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களின் மரபு. அதில் முன்னோர்களான பிதுரர்களை, ‘‘தென்புலத்தார்” என்று அழகாக அழைக்கின்றார்கள். ஒருவன் இறந்தால் (பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும்) ஆன்மாதான் உடலை விட்டுவிட்டு போகும். அதுவே வேறொரு உடலைத் தேடும். இதை திருவள்ளுவரும்,

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
(அதிகாரம்: நிலையாமை குறள் எண்:338)

– என்ற குறளில் அழகாகச் சொல்கிறார்.

உடல் நிலைப்பது உயிர் உள்ள வரையில்தான்; இரண்டும் எதற்கும் கட்டுப்பட்டது மல்ல; அவற்றின் நட்பும் நீடித்ததல்ல. உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய பாவ கர்ம வினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, பாவ புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்ரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருக்கும். அந்த உலகத்தில் இருப்பவர்கள் பிதுரர்கள்.

அமாவாசை

பித்ரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர். அவர்கள், மாதம் ஒரு நாள், அதாவது சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசை நாள் அன்று, பிதுர் உலகத்தில் இருந்து, நாம் தரும் உணவு மற்றும் தீர்த்தத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அது தராவிட்டால் பசியாலும் தாகத்தாலும் தவித்துவிடுகிறார்கள். அந்த வருத்தம் ஒரு சாபமாகவும், தோஷமாகவும் மாறுகிறது. அப்படி மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அமாவாசை என்று அவர்களுக்கு எள், நீரால் திலதர்ப்பணம் செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.

அவர்களே, நம்மைத் தேடி, நாம் வாழும் பூ உலகிற்கு வருகின்ற நாட்கள்தான் மகாளயபட்சம். அதில் வருகின்ற அமாவாசை மகாளய அமாவாசை. நம்மைத் தேடி வரும் நம் முன்னோர்களுக்கு ஒரு வணக்கத்தையும் உபசாரத்தையும் நன்றியையும் தெரிவிக்கவே மகாளயபட்சம். அது புண்ணிய பலன்களை அள்ளி அள்ளித் தருவது. அவர்கள் ஆடி அமாவாசைக்கு, தான் வாழ்ந்த குடும்பத்தைத் தேடி வருவதாகவும், மஹாளய அமாவாசை காலத்தில் இங்கே இருப்பதாகவும், தை அமாவாசைக்கு பூலோகத்திலிருந்து தங்கள் பிதுர்லோகத்திற்கு திரும்ப புறப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனவே, ஆடி அமாவாசை, தை அமாவாசை வரை உள்ள அத்தனை அமாவாசைகளும் பிதுர் வணக்கத்திற்கு உள்ள சிறப்பான நாள்களாகும்.

நம்மைப் போன்று, இல்லறத்தில் இருப்பவர்களுக்கு, நான்கு கடன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தேவகடன், ரிஷிகடன், பூதகடன், பிதுர்கடன். ஒரு இல்லறத்தான் முக்கியக் கடமையாகப் பித்ருக்களை உபசரிக்க கூடிய சடங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:43)

இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம். அதனால்தான் திருவள்ளுவர் முதல் வழிபாடாக தென்புலத்தார் வழிபாட்டை வைத்தார். தெய்வ வழிபாட்டுக்கு சற்று குறைவு வந்தாலும், முன்னோர்கள் வழிபாட்டில் எந்த குறையும் இருக்கக் கூடாது. அது மிகுந்த சிரத்தையுடனும், கவனத்தோடும் செய்யப்பட வேண்டும் என்பதால்தான் அந்த வழிபாட்டுக்கு `ச்ராத்தம்’ என்று பெயர் வைத்தார்கள்.

மறுபிறவி எடுத்தவர்களுக்கு ஏன் செய்ய வேண்டும்?

இப்பொழுது ஒரு கேள்வி வரும். எப்போதோ இறந்து போன முன்னோர்கள் இன்னுமா மறுபிறவி எடுக்காமல் பிதுர் உலகத்தில் இருப்பார்கள்? அவர்கள் எப்போதோ மறுபிறவி எடுத்து இருப்பார்களே? பிறகு எதற்கு அவர்களுக்கு இந்த திலதர்ப்பணம் செய்ய வேண்டும்?

இதற்கு நம்முடைய ஆன்றோர்கள் சொன்ன பதில் இதுதான்.

1. அவர்கள் மறுபிறவிகள் எடுத்தாலும், அல்லது முக்தியை அடைந்தாலும், அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும், நம் பித்ரு பூஜைகள் ஏதோ ஒரு வகையில், பித்ரு தேவதைகளின் மூலம், அவர்களைச் சென்றடைகின்றன. மறுபிறவி பெற்ற பின்னும் அது அவர்களுக்குப் பயன்படுகிறது.

2. இந்த பூஜையின் பலன் அவர்களை சென்றடையவில்லை என்றாலும், அவர்களை நினைத்துச் செய்யும் நன்றி உணர்வால், நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

3. நமது முன்னோர்களில் யார்யார் பிறவா நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என ஆன்றோர்கள், ரிஷிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். நாம் செய்யும் பித்ரு பூஜை வீணாவதில்லை.

அவர்களுக்கு எதுவும் முக்கியமாக வேண்டாம். நாம் தருகின்ற எள்ளும் நீரும் அவர்களுக்கு மனநிறைவைத் தருகின்றன. இதற்காக ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பிதுர்க்கடன் சிரத்தையோடு செய்வதன் மூலமாக அவர்களுக்குத் தாகம், பசி நீங்கி ஆசீர்வாதங்களை அளிக்கிறார்கள்.

யார் யார் செய்ய வேண்டும்? பெண்கள் செய்யலாமா?

1. தாய் / தந்தை இல்லாத ஆண்கள் அவசியம் செய்ய வேண்டும்.

2. குழந்தை இல்லாத, அதே சமயத்தில் கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். சங்க காலத்தில் பெண்கள் செய்த நீத்தார் வழிபாடு பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன.

3. திருமணம் ஆன பின், தன்னுடைய தாய் தந்தையர் மறைந்துவிட்டால், அவர்களை பெண் வணங்கலாம். ஆனால், அமாவாசை விரதம் இருப்பதற்கும் தர்ப்பணம் செய்வதற்கும் விதிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

4. பெண்கள் முறையான விரதம் இல்லாமல் (தர்ப்பணம் செய்யாமல்) கோயிலுக்குச் சென்று தானம் செய்யலாம். வீட்டில் பெரியவர்களை அழைத்து அன்னமிட்டு மரியாதை செய்யலாம். பொதுவாக, தில தர்ப்பணமும், சிரார்த்தமும் ஆண்வாரிசுகள் செய்ய வேண்டும் என்றே சாஸ்திரம் சொல்கிறது.

எப்படிச் செய்ய வேண்டும்?

அன்றைக்கு காலையில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்கள் பெயரையும் கோத்ரத்தையும் சொல்லி, கோத்ரம் இல்லாவிட்டால் முன்னோர் பெயரையும் உறவையும் சொல்லி, தாய் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், தந்தை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என மூன்று தலை முறையினர்கள், பங்காளிகள் (ஞாதிகள்), முதலியோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதில் “யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: குசோ தகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத’’ என்று ஒரு மந்திரம் வரும். தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லாதவர்களுக்கும் சேர்த்து எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.

அன்னதானம் செய்யலாமா?

அவசியம் செய்ய வேண்டும். பிதுர் தர்ப்பணம் செய்த நாளன்று அன்னதானம் செய்வது மிக நல்லது. இதன் மூலமாக பிதுர் தோஷம் நீங்கும். புண்ணியங்கள் சேரும். ஆனால், ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதிதான் அன்னதானமே தவிர, அது பிரதானமான வழிபாடு அல்ல. பிரதானமான வழிபாடு என்பது அவர்களுக்கு விதிப்படி தர்ப்பணம் செய்வதுதான். அதில்தான் அவர்கள் மகிழ்ச்சி அடைவர். அவர்கள் தாகமும் பசியும் தர்ப்பண நீரால்தான் நீங்கும். எனவே, முன்னோர்கள் வழிபாட்டை முறையாக நடத்திவிட்டு, அன்னதானம் செய்யுங்கள். அது பன்மடங்கு புண்ணியத்தைத் தரும். முன்னோர்கள் வழிபாடு நடத்தாமல் அன்னதானம் செய்தால் அன்னதானத்தின் பலன் கிடைக்குமே தவிர, அது முன்னோர்களின் பசியையும் தாகத்தையும் நீக்காது. முறையான வழிபாடாகவும் இருக்காது.

எங்கே செய்வது சிறப்பு?

சமுத்திரக் கரைகளிலும், நதிகளிலும், குளக்கரைகளிலும், ஆறுகளிலும் இந்த ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்வது நல்லது. பொதுவாக, முன்னோர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை நீர்நிலைகள் உள்ள இடங்களில் செய்வது நல்லது. புண்ணிய நதி தீரத்தில் தர்ப்பணம் செய்வது உத்தமமானது. சில கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் இதற்கான வசதிகள் உண்டு. திருவெண்காடு தலத்தில் (புதன் தலத்தில்) தர்ப்பணம் செய்வதன் மூலமாக 21 தலைமுறைகள் உய்வுபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. திருவெண்காடு, `ருத்ரகயா’ என்று வழங்கப்படுகிறது. சென்னைக்கு அருகே திருவள்ளூரில் உள்ள திருக்குளம் `ஹ்ருத்தாபனாசினி’ மிகவும் புனிதமானதாகும் என்பதை கீழுள்ள சமஸ்கிருத பாடல் மூலம் அறியலாம்.

தர்சநாத் ஸ்பர்சநாத் ஸ்னானாத், ஸ்த்யோ ஹ்ருத்தாபனாஸ்நாத்
அதோ ஸர்வேஷு லோகேஷு, நம்ந ஹ்ருத்தாபனாஸநாத்.

இத்திருக்குளத்தைப் பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அனைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளைவிட புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கேயும் அமாவாசை மற்றும் மகாளய காலங்களில் ஏராளமானவர்கள் வந்து வழிபாடு நடத்துகின்றனர். இதே போல, எண்ணற்ற திருக்கோயில்களும் புண்ணிய நதிகளும் உள்ளன.

வீட்டில் செய்யலாமா?

தாராளமாக வீட்டில் செய்யலாம். அதில் ஒரு தவறும் இல்லை. சிரார்த்தம் செய்து ‘‘தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம:’’ “ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:” எனக்கூறி வழிபட வேண்டும். வீட்டிலேயே கங்கையையும், காவிரியையும் நினைத்து தர்ப்பணம் செய்துவிட்டு, அந்த தர்ப்பண நீரை, கால் படாத இடத்தில் சேர்த்துவிடலாம். அல்லது அருகாமையில் உள்ள நீர் நிலைகளிலும் கொண்டுபோய் சேர்க்கலாம். பிதுர்பூஜை செய்யாமல் தெய்வ பூஜை செய்வதற்கு அனுமதி இல்லை. எனவே, அன்று மாலையில் பிதிர் கடன் முடித்த பிறகு கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றுவது நல்லது. அமாவாசை அன்று காகத்திற்கும் பசுவிற்கும் உணவு வழங்குவது சிறப்பானது. சிரார்த்தம், தர்ப்பணம் செய்வதற்கு உசித காலம் 10.30 மணியிலிருந்து 3.30 மணிக்குள் செய்யலாம். பட்ச மஹாளய தர்ப்பணம் செய்பவர் அமாவாசை தர்ப்பணத்திற்கு பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பித்ரு தோஷம் ஏன் வருகிறது?

செய்ய விதிக்கப்பட்ட ஒரு வேலையைச் செய்யாமல் விட்டுவிட்டால் அது குற்றம். அந்தக் குற்றம் நமக்கு ஏதேனும் ஒருவிதத்தில் தண்டனையாக மாறும். உதாரணமாக ஒரு பிள்ளை, தன் தாய் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். அது அவர் கடமை. அப்படிச் செய்யாவிட்டால் அது குற்றம். அதைப் போல ஒரு தந்தை, தான் பெற்ற பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும். செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் குற்றம்.

அதைப் போலவே வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு வழிவழியாக நாம் செய்யவேண்டிய ஒரு சிறு வழிபாட்டை செய்யாமல்விட்டால், அது குற்றம். அந்த குற்றமே பிதுர்தோஷம் எனப்படுவது. அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம். தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பித்ரு தோஷம் வேறு பல காரணங்களாலும் வரும்.

1. கருச்சிதைவு
2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது போன்ற சில காரணங்களும் பிதுர் தோஷம் வரும் வாய்ப்பைத் தருகிறது.

எப்படி வேலை செய்யும்?

நம் குடும்பத்தில் நடைபெறும் விரும்பத்தகாத அல்லது திரும்பத் திரும்ப நடைபெறுகின்ற சில எதிர்மறை விஷயங்களை வைத்துக் கொண்டு, நாம் பிதுர் தோஷத்தை கண்டு பிடித்துவிடலாம். திருமணத் தடைகள், தாமதத் திருமணம், திருமணம் நடந்தாலும் விவாகரத்து, கடுமையான உடல் உபாதைகள், மனநோய், வியாபாரத்தில் நஷ்டங்கள், காரணமில்லாமல் குடும்பத்தில் மன நிம்மதிக் குறைவு ஏற்படுதல், குடும்ப உறுப்பினர்களிடையே எப்பொழுதும் சண்டை, சச்சரவு, சந்ததி விருத்தி இல்லாமலிருப்பது, விபத்துக்கள் முதலிய சில தொடர் நிகழ்வுகள் பிதுர் தோஷத்தைச் சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் கண்டறிய முடியுமா?

பிதுர் தோஷத்தை ஜாதகத்தில் கண்டுபிடித்துவிடலாம் என்றாலும், அதற்கு ஒரு நிபுணத்துவம் தேவை. ஆனாலும், பொதுவாக சில விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பிதுர் தோஷம் உண்டு. ஆனால், இந்தக் குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு, பிதுர் தோஷத்தை முடிவு செய்துவிடவும் முடியாது.

பிதுர் காரகன் சூரியன் பாதிக்கப் பட்டிருந்தாலும், ராசி பாதிக்கப்பட்டிருந்தாலும், ராசியும் லக்னமும் சர்ப்ப கிரகங்களால் கிரகண தோஷத்தில் இருந்தாலும், முன்னோர்களின் இடத்தை குறிக்கக்கூடிய திரிகோண ராசிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், பிதுர்தோஷம் வலுவாக இருப்பதைச் சுட்டிக் காட்டும். ஜெனன ஜாதகத்திலோ அல்லது பிரசன்ன ஜாதகத்திலோ மாந்தி இருக்கும் நிலையை வைத்து பித்ருதோஷத்தை அறியமுடியும். மேலும், மாந்தி எந்த கிரகத்தோடு சேர்க்கை பெற்றிருக்கிறதோ அந்த கிரக சம்பந்த உறவினால் ப்ரேத தோஷம் ஏற்பட்டிருப்பதை அறியமுடியும். குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை இந்த தோஷத்தை ஓரளவு கட்டுப்படுத்தும்.

சிலர் திதி, தர்ப்பணம், தராவிட்டாலும், எந்த தோஷமும் பாதிப்பும் இல்லாமல் இருப்பார்கள். பிதுர்தோஷம் என்பது அதற்கான தசாபுத்திகளில்தான் தன்னுடைய வேலையைச் செய்யும். எனவே, கிரக நிலைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் முடிவு செய்துவிட முடியாது. இதை தக்க ஜோதிடர் மட்டுமே முடிவு செய்ய முடியும். நல்ல ஜோதிடரின் மூலம் உறுதி செய்து கொண்டு, தக்க பிராயச்சித்தம் செய்ய வேண்டும். பிறகு, தொடர்ந்து முன்னோர்களுடைய திதி தர்ப்பணத்தை விடாமல் செய்ய வேண்டும்.

பரிகாரம்

ராமேஸ்வரம் சென்று `திலஹோமம்’ செய்வதும், `கயாசிரார்த்தம்’ செய்வதும், காசி, அலகாபாத் சென்று `திவசம்’ செய்வதும், திருவெண்காடு சென்று `திதி’ கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப் பரிகாரம். சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும். இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும். இந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் பித்ருதோஷம் விலகும். சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள், 100 கிராம் பச்சரிசி, அகத்திக் கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க, பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இதனால், பித்ருதோஷம் முழுமையாக நீங்கும்.

திலஹோமம்

திலஹோமம் என்பது கருப்பு எள்ளைக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், இறந்த முன்னோர்கள் சத்கதி அடையவும் செய்யப்படுகிறது. இறந்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் விடுதல், அகாலமாக இறந்தவர்களுக்கு கர்மாக்களால் (தக்க பரிஹாரம் செய்யாததால்) திருப்தி ஏற்படாமல், பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல், வருடா வருடம் முறையாக சிரார்த்தம் செய்யாமல் இருத்தல், சிரார்த்தத்தை முறை தவறி செய்தல், போன்ற செயல்களால் பித்ரு தோஷம் ஏற்படும்.

திலஹோமத்தால் தோஷம் விலகும். திலஹோமத்தை தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்யக்கூடாது. கர்மாவுக்கு காரகன் சனி பகவான். எனவே, சனிக்குரிய தான்யமான எள்ளை பித்ரு சிரார்த்த கர்மங்களுக்கும், அவர் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பாவிக்கிறோம். எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக சொல்வார்கள். எனவே, அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்துகிறோம். ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு ப்ரதிமைகளை ஸமுத்ரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், கிருஷ்ண பட்சம், சனிக்கிழமை, அமாவாசை, பரணி நட்சத்திரம், குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் திலஹோமத்துக்குச் சிறந்தவை.

திலஹோமத்தை தேவையில்லாமல் செய்யக் கூடாது, யாருக்குத் தேவையோ அவர்கள்தான் திலஹோமத்தைச் செய்ய வேண்டும். திலஹோமம் செய்து பித்ரு தோஷம் விலகிய பின்னர், அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருடாவருடம் சிரார்த்தம் ஆகியவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் செய்த திலஹோமம் முழுமையான பலனைத் தரும்.

எத்தனை தினங்கள்?

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள் என்பார்கள். ஒரு வருடத்தில் 96 தடவை ஸ்ராத்தங்கள், ஹிரண்ய ரூபமாகச் செய்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு 12, அமாவாசை 12, அஷ்டகை 12, வ்யதீபாதம் 13, வைத்ருதி 13, மன்வாதி 14, யுகாதி 4, மஹாளயம் 16.

இத்தனையும் முடியாவிட்டால்?

இத்தனை நாட்களையும் முறையாக அனுஷ்டிக்க முடியாதவர்களுக்கு, 12 அமாவாசை தினங்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, அவர்கள் இறந்த மாதத்தில், இறந்த திதியில் சிரார்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். இதுதவிர, ஆண்டுக்கு ஒரு பருவம், அதாவது புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் ஆரம்பித்து, அமாவாசை வரை (மகாளய அமாவாசை), முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி நீர்க்கடன் செய்யவேண்டிய தினங்களாக அனுஷ்டிக்க வேண்டும்.

மஹாளயம் எல்லா நாளும் செய்ய வேண்டுமா?

பொதுவாக, மூன்று முறைகளில் முன்னோரை வழிபடலாம். ஒன்று எள்ளும் தண்ணீரும் விட்டுத் தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று ஹிரண்ய சிரார்த்தம், அதாவது, நாம் முன்னோராகப் பாவிக்கும் ஒருவருக்கு பாத பூஜை செய்து தட்சிணை கொடுப்பது. மூன்றாவது ஹோமங்கள் செய்வது அன்னசிரார்த்தம். இவை மூன்றுமே சிறப்பானவை என்றாலும், குறைந்தபட்சம் எளிமையாக முன்னோர்கள் பெயர் சொல்லி, தர்ப்பணமாவது செய்ய வேண்டியது அவசியம். மஹாளயம் முழுதும் 15 தினங்களும் வழிபாடு செய்வது சிறப்பானது. இதற்குச் சக்தியோ, நேரமோ இல்லாவிட்டால், பஞ்சமி முதலோ அல்லது அஷ்டமி, தசமி முதற்கொண்டு அமாவாசை வரையில் செய்யலாம். இதற்கும் சக்தி இல்லாதவர் 15 நாட்களில் விலக்க முடியாத ஒரு நாளில் செய்யலாம்.

தொகுப்பு: தேஜஸ்வி

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?