சென்னை: அனைத்து பள்ளிகளிலும் மகிழ் முற்றம் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, அதற்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் பள்ளியில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மகிழ் முற்றம் கையேட்டை வெளியிட்டு பேசியதாவது: நமது தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குதான் மகிழ் முற்றம். அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்பட காரணம் ஆசிரியர்கள் தான். இந்த வயதில் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மாணவர்களின் கடமை. அரசியலை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அதனால் குழுவில் உள்ள மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். நேரம் தவறாமையும் முக்கியம். இது உளவியல் ரீதியான மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புகிறேன். இதற்கான இலச்சினையை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அதன்படி எல்லா பிள்ளைகளையும் பாதுகாப்பது எங்கள் நோக்கம். மகிழ் முற்றம் திட்டச் செயலாக்கத்துக்காக கையேடு ஒன்று, பள்ளிக் கல்வித்துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி 37592 அரசுப் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சுமார் 30 ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உலக குழந்தைகள் தினமான இன்று, மாணவர்களுக்கான வளமான கல்வியை வழங்குவதற்கான ஒரு மைல் கல்லை இந்த செயல்படுத்த உள்ளது. மாணவர்களின் வெற்றி என்பது அவர்களின் தனிப்பட்ட வெற்றி அல்ல. அவர்களை ஆசிரியர்கள் வழி நடத்த வேண்டும். நட்புணர்வுடன் பழகும் தன்மை வளர்க்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.