மதுராந்தகம்: மதுராந்தகத்தில் மிகப் பழமையான வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர், கடப்பேரி பகுதியில் புகழ்பெற்ற மிகப் பழமையான ஸ்ரீ வெண்காட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மதுராந்தகம் மட்டுமின்றி சென்னை, பாண்டிச்சேரி, செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்வது வழக்கம்.
மக்களிடையே பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக கோயிலின் உபயதாரர்கள் சிலர் ரூ.70 லட்சம் நிதி திரட்டி, அதன் மூலம் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கோயிலின் ராஜகோபுரம் புனரமைப்பு, வண்ணம் பூசுதல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் மூலவர், தாயார், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் மற்றும் மடப்பள்ளி ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயிலின் பிரகாரப் பகுதிகளில் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.
இக்கோயில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இங்கு புனரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும். பின்னர் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலில் மிக விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என கோயில் செயல் அலுவலர் தகவல் தெரிவித்தார்.