மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்து முன்னணி சார்பில் வரும் 22ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள திடலில் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. இந்த வளாகத்திற்குள், முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பூஜைகள், நிகழ்ச்சிகள் நடத்தி 22ம் தேதி மாநாடு நடத்த உள்ளோம். இதற்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘12 நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது. 3 நாள் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள பரிசீலிக்கப்படும். மனுதாரர் தரப்பில் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முறையான தகவல் தரவில்லை. மனு அளித்த பின்பு காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை. நிகழ்ச்சியில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் தர மறுத்து விட்டனர். அவ்வாறு இருக்கக்கூடிய நிலையில் நிகழ்ச்சிக்கு எவ்வாறு போதிய பாதுகாப்பு வழங்க முடியும். பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் போன்று நடந்தால் என்ன செய்வது?’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘இந்து முன்னணி தரப்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஆகம விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா’’ என கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில், ஆகம விதிகளை பின்பற்றி தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மாநாடு, பொதுக்கூட்டம், தனியார் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனர். எனவே, போலீஸ் பாதுகாப்பு கேட்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட தொகையை செலுத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்தால் தானே உரிய பாதுகாப்பு வழங்க முடியும். மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு தொடர்பாக காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் காவல்துறை 12ம் தேதிக்குள் முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுக்கான முன் ஏற்பாடுகளை செய்யலாம். ஆனால், எவ்வித பூஜைகளும் செய்யக்கூடாது’’ எனக் கூறி, விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.