Thursday, February 22, 2024
Home » மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி முறையில் போட்டித் தேர்வுக்கு படித்து வங்கி உதவி மேலாளர் ஆன பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்ச்சி

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி முறையில் போட்டித் தேர்வுக்கு படித்து வங்கி உதவி மேலாளர் ஆன பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்ச்சி

by Dhanush Kumar

மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிரெய்லி முறையில் போட்டித் தேர்வுக்கு படித்து வங்கி உதவி மேலாளர் ஆன பார்வையற்ற மாற்றுத்திறனாளி, இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கலைஞர் வாழ்கிறார்’ என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அங்குச்செல்வி. இவர்களது ஒரே மகன் ஸ்ரீ காந்த் (25). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர், தனது கடின உழைப்பால் பி.ஏ.பி.எட்.படித்துள்ளார். போட்டி தேர்வு எழுதி அரசுப் பணிக்கு செல்ல விரும்பினார். இதற்காக மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக மாற்றுத்திறனாளிகள் பிரிவில், பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களை படிக்க தொடங்கினார்.

4 மாதங்களாக இடைவிடாது படித்த ஸ்ரீ காந்த் தனியார் வங்கி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி மேலாளர் ஆகியுள்ளார்.இது குறித்து ஸ்ரீ காந்த் கூறுகையில், ‘‘வங்கி தேர்வில் வெற்றி பெற்று உதவி மேலாளராக தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் வங்கி தேர்வில் வெற்றி பெற முடிந்தது. இத்தகைய நூலகத்தையும், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி பிரிவை அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது குறித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில், ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு 100வது நாளில் அங்கு சென்றிருந்தோம். அப்போது மாற்றுத்திறனாளிப் பிரிவில் வாசித்துக் கொண்டிருந்த மாணவர் ஸ்ரீ காந்த்தை சந்தித்தேன். அவர், போட்டித் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார். தற்போது வங்கி தேர்வில் வெற்றி பெற்று உதவி மேலாளர் ஆகியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றிகள். கலைஞர் வாழ்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

13 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi