அவனியாபுரம்: இலங்கையிலிருந்து நேற்று காலை மதுரை வந்த தனியார் விமானத்தில் 109 பயணிகள் இருந்தனர். இவர்களின் உடைமைகளை சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள், 4 பேரிடம் உயர் ரக மது பாட்டில்கள் மற்றும் சேலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருப்பதாக கூறியதால், அதிகாரிகள் அவற்றுக்கு சுங்க வரி விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது முற்றியதால், அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மதுரை, வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த பயணி செல்வகுமார் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தவிர மற்ற மூன்று பயணியரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக, தங்கள் நாட்டு தூதகர அதிகாரிகளிடம் புகார் அளிப்போம் என கூறிய அவர்கள், சென்னை புறப்பட்டு சென்றனர். இந்த திடீர் மோதல் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.