மதுரை: மதுரை எய்ம்ஸ் திட்ட டெண்டர் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனம் மீது ஏராளமான ஊழல் புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான டெண்டர் வழங்க ஆலோசகராக சேலத்தைச் சேர்ந்த முகேஷ் அசோசியேட்ஸ் மீது முறைகேடு புகார் எழுந்துள்ளது. டெண்டர் பணிக்கு ஆலோசனை வழங்க 6 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
ரூ.1528 முறைகேடு புகார் தொடர்பாக முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் மீது 8 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கும் நிறுவனம் ஆலோசகராக தேர்வுசெய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. உரிய விதிகளை பின்பற்றாமல் ஆலோசகராக முகேஷ் அசோசியேட்ஸ் தேர்வு என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் போட்டி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
ஆலோசகர் நியமனம் தொடர்பாக வழக்கமாக ஆன்லைனில் டெண்டர் நடைமுறை மேற்கொண்டு வந்த நிலையில் நேரடியாக நியமனம் செய்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விதிகளில் தளர்வு என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் கூட நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.