திருப்பரங்குன்றம்: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து 3டி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015, பிப்ரவரியில், பாஜ அரசின் பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதையடுத்து, மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதனை தொடர்ந்து கடந்த 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், சுமார் ரூ.1,977 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் துவங்காமல் இழுத்தடித்து, பெருத்த சர்ச்சைகள் உருவானது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹெலிகாப்டர் வந்து இறங்குவது, ஹெலிபேட் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சோலார் வசதி, கார் பார்க்கிங் என பிரம்மாண்டமாக கட்டமைப்புகள் உள்ளவாறு 3டி மாதிரி வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கல்வி வளாகம், புறநோயாளிகள் பிரிவு, மாணவர்கள் விடுதி, அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. முதல் கட்டப் பணி 2026ம் ஆண்டிலும், 2ம் கட்டப் பணி 2027ம் ஆண்டிலும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 900 படுக்கைகள், ஹெலிகாப்டர் தளம், குறுங்காடு போன்றவை எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் கொண்டு வரப்பட உள்ளது, மருத்துவமனை எப்படி இருக்கும் என்பது விளக்கப்பட்டு உள்ளது.