தூத்துக்குடி: மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுத்து ஜெயிலர் பட டிக்கெட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் இலவசமாக வழங்கினார். கோவில்பட்டியில் சத்தியபாமா திரையரங்கில் காலை காட்சிக்கான அனைத்து (550) டிக்கெட்டுகளை கடம்பூர் ராஜு முன்பதிவு செய்தார். மதுரையில் ஆக.20ல் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைக்கும் விதமாக நூதன முயற்சியில் ஈடுபட்டார். ஜெயிலர் படம் பார்க்க திரையரங்குக்கு வந்த அனைவருக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினார்.
பின்னர் பேசிய கடம்பூர் ராஜு, சிலர் தூண்டுதலின் பெயரால் அதிமுக மாநாட்டுக்கு எதிராக சில அமைப்புகள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றன. அதிமுக எந்த சலசலப்புக்கு அஞ்சாவது என தெரிவித்தார். அதிமுக, தங்களிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் தரப்பினரால் மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், இதற்கு கூடுதல் கவனம் எடுக்கப்பட்டு வருகிறது.
அதிமுக மாநாட்டில் பங்கேற்கும் அனைவரையும் அசத்தும் வகையிலான ஏற்பாடுகள் வேக வேகமாக செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டிற்கு வருகைத் தரவுள்ள தொண்டர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாநாடு வளாகத்தில் தொண்டர்கள் அமர்வதற்காக சுமார் 1.25 லட்சம் நாற்காலிகள் போடப்படுகின்றன. தொண்டர்களுக்கு காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரையிலும் இடைவிடாது உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் பட டிக்கெட்களை இலவசமாக வழங்கி மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அழைப்பு விடுத்தார். திண்டுக்கல்லில் ஏற்கனவே தக்காளி விலை உச்சத்தில் இருந்தபோது ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.