மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பொதுமக்கள் நோய் நொடி நீங்கி சுகாதாரத்துடன் வாழ்வதற்காக தமிழ்நாடு அரசின் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்னும் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ துாரம் கொண்ட நடைபயிற்சி மூலம் நலவாழ்வு பேணுவதற்காகவும், தொற்று அல்லாத நோய்களை தடுக்கவும், நிர்வகிக்கவும், உடல் ரீதியான சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றவும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடைப்பயிற்சி தளம் உருவாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் நவ.4ம் தேதி அன்று காலை 6 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்னும் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் அன்றைய தினமே நடைமுறைபடுத்தும் வகையிலும் ஆர்வமுள்ள நடைப்பயிற்சி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், நடைபாதை வழிதடமாக ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வந்தடையும் தூரம் மொத்தம் (8 கி.மி) கொண்ட பாதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறைகள், இருக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகளவில் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.